மகிழ்ச்சி எனும் சாதனை மழை | அ. சந்தோஷ்

 நேற்றைய நாள் முழுதும் சாதனையாளர்களின் பேச்சுக்களை அவன் கேட்டுக் கொண்டிருந்தான். கல்லூரியில், நீயும் சாதனையாளராக மாறலாம் என்னும் தலைப்பில் பல அரிய ஆளுமைகளைப் பற்றிய உரைகள் நடத்தப்பட்டன. கேட்டுக் கொண்டிருந்த போது அப்படியே மெய்சிலிர்த்துப் போய் விட்டது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்னும் வெறி அவனுக்குள் எழுந்து முழு உடலையும் ஆட்டிப்படைத்தது. இதயம் இடையிடையை அதி பயங்கரமாக படபடத்தது. ஓரிரு முறை உடல் அவனை அறியமாலே நடுங்கியது. அருகில் இருந்த நண்பன், என்னடா ஆச்சு என்று கேட்டுப் பார்த்தான். ஆனால் அவன் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. உடலில் ரத்த ஓட்டம் தீவிரமாகியதாய் உணர்ந்தான். தன்னால் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை ஆழமாக பதிந்து கொண்டிருந்தது.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பருள் இருவர், தங்களுக்குள் கிசுகிசு பேசி மகிழ்ந்திருப்பதைக் கண்டபோது அவனுக்கு அது பிடிக்கவில்லை. சுத்த வேஸ்ட்டுகள் என மனதில் தீர்மானம் ஏற்றிக் கொண்டான். வாழ்க்கையில் லட்சியமற்றவர்களை இனிமேல் நண்பர்களாகக் கொண்டிருக்கக் கூடாது என தீர்க்கமான தீர்மானம் எடுத்தான். அருகில் இருந்த இரு நண்பர்கள் கதை பேசி பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதுவும் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வானங்களை வசப்படுத்தும் வசனங்கள் கேட்டிக்கொண்டிருக்கும் போது, இவ்வுலகு சார்ந்த இன்பங்களில் மூழ்கி துண்டுப் பிஸ்கெட்டுகளில் வாழ்வை தொலைப்பைவர்களைப் பார்த்தபோது அவனுக்கு கேவலமாக இருந்தது. சே இவர்கள் கூடவெல்லாமா நட்பு வைத்திருக்கிறோம் என்று சுயம் விமர்சித்தான். நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தீரமானித்துக் கொண்டிருந்தான்.

photo: pixabay.com

பெரும்பான்மையினர், சாதனையாளர்களைப் பற்றிய உரையில் கவனம் செலுத்தாமல், தங்களுக்குள் சிறு சிறு கதைகளை பேசி இன்புற்றிருப்பதைப் பார்த்த போது அவனுக்கு சகிக்கவில்லை.

சாதனையாளர்களின் வரிசையில் தன் பெயரும் இடம் பெற வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டிருந்தான். இங்கிலாந்தில் மதாம் துசோ (Madame Tussauds) மெழுகுச் சிலை அரங்கினுள் தன் சிலையும் இடம் பெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். எதிர்காலத்தில் தன்னைப் பற்றி ஸ்லாகித்து பத்திரிகைகள் எழுதப்போகும் வார்த்தைகளைப் பற்றிய கனவில் மூழ்கிக் கொண்டிருந்தான். டைம்ஸ் பத்திரிகையின் முன் அட்டையில் தன் படம் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதை அடைவேன் என்று நம்பியவன் அதில் மிதக்கத் தொடங்கினான். ஆரவார ஒலிகள், கைத்தட்டல்கள், புகழுரைகள், வர்ணனை வசனங்கள் என்று தன்னைப் பற்றிப் பிறர் செய்யப்போகும் காரியங்களைப் பற்றிய இதய ஆரவாரத்தில் மூழ்கி இருந்தான். அரங்கத்தில் இருக்கும் சக நண்பர்கள் அனைவரும் எதுக்கும் உதவாதவர்கள். அவர்கள் அன்றாடம் சோறுண்டு பூமிக்குப் பாரமாக வாழும் பாவிகள் என்றும் தனக்குள் கூறிக் கொண்டான்.

அவனது பார்வைகள் தீர்க்கமாய் தூரமாய் வானமே எல்லை என்னும் மிதப்பில் கிடந்தன. அரங்கங்களைத் தாண்டி அவனது உலகம் விரிந்துக் கொண்டிருந்தது. அதற்கிடையில் அரங்கில் நண்பர்கள் இணைந்து ஆடிய நடனத்தை அவன் கண்டுகொள்ளவில்லை. சுத்த மூடர்கள், நடனத்தில் சிறு ஆடல்களிலும் பாடல்களிலும் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூத்தாடிகள் என தேவையற்ற வார்த்தையை தனக்குள் கூறிக்கொண்டான். அரங்கில் இருந்தவர்கள் பெரும் ஆரவரத்துடன் நடனச்சுவடுகளை ரசித்ததோடு, இசைக்கு ஏற்ப கைகளால் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாதனையாளர்களைப் பற்றிப் பேச வந்திருந்தவர்களும் அதை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவர்கள் மீதிருந்த மரியாதையின் நிமித்தம் அவர்களை பழித்துரைக்காமல், அவர்களை பொறுமையோடு சகித்துக் கொண்டான்.

நடனத்தைப் பற்றி மெச்சிய தொகுப்பாளர்களை அவனுக்கப் பிடிக்கவில்லை. நட்புக்களும் ரசனைகளும் தொலைத்துக் கொண்டிருந்தான் அவன். கோட் சூட்டுக்குள் வாழ்க்கையை ஒதுக்கி அது தரும் கவுரத்தில் வாழ்வை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். சுற்றும் மகிழ்ச்சி எனும் சாதனை மழையென கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் இயல்பான வாழ்வை மறுத்து இயங்கினான். வாழ்க்கை அவன் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது மவுனமாக...

கருத்துரையிடுக

0 கருத்துகள்