அவளைப் பற்றியப் பேச்சு ஆரம்பமானது. அவளது உடை, நடை, பாவனை, உதிரும் மொழிகள், உடல்மொழிகள், உறவுகள், கல்வி, நண்பர்கள், பயன்படுத்தும் வாகனம், வாகனம் ஓட்டும் விதம் எல்லாம் அக்குடும்பத்தின் அன்றைய கதையாடலுக்கான மையப்பொருளானது. எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் இன்பத்திற்கான கதையாடலாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அவளைப் பற்றிப் பேசும் போது உள்ளத்திற்குள் ஒரு விதமான சுகத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நிகிலா என்னும் பெயர் எவர் வாயினின்றும் உதிரக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாய் இருந்தார்கள். அவளைப் பற்றிய தங்களுடைய பார்வைகளை வெளிப்படுத்தும் அடைமொழிகளால் அவளைப் பற்றியப் பேச்சு வளர்ந்துக் கொண்டிருந்தது. அது, அந்த சிரிங்காரி, அந்த ஊர்ச்சுத்தி, பெண் என்ற நினைப்பில்லாதவ, ஊர் மயக்கி என்று பலப் செயர்கள். அவற்றுள் சில நா கூசவைப்பவை.
நிகிலா தனது பெயரைப் பற்றி
பெருமையாக நினைத்திருத்திருக்கிறாள். அப்பெயரைச் சொல்லி அவளை அழைப்பவர்களை
அவளுக்கு மிகவும் பிடிக்கும். அப்பா போட்டப் பெயர். நிகிலா என்று அவர் முழுமையாக
சொல்வார். அதில் அவள் அலாதி சுகம் அனுபவித்திருகிறாள். அதில் அவள் தன்னுடைய முழுயான
ஆளுமையை அடங்குவதாக உணர்ந்திருக்கிறாள். பள்ளியிலும் கல்லூரியிலும் நிகிலா வேந்தன்
என்னும் அவளுடைய முழுப்பெயரையும் சொல்லி அழைக்கும் போது, தான் மிகப்பெரி மனிதையாகி
விட்டதாக உணர்ந்து பெருமிதம் கொண்டிருக்கறாள். அப்பாவின் பெயர் மகிழ்வேந்தன்.
அப்பெயரின் வேந்தன் நிகிலா என்னும் பெயரோடு சேர்க்கப்படு நிகிலா வேந்தன் என்றும்
பள்ளிக்கூடத்தில் பெயர் வைக்கப்பட்டது. நிகி என்று அம்மாவும் தங்கையும்
கூப்பிடுவதுண்டு, அதில் இருக்கும் நெருக்கமும் சுதந்திரமும் அவளை முழுப்பெயர்
சொல்லி அழைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்னும் மனநிலைக்குக் கொண்டுப் போய்
இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது, நிகி என்று அழைப்பவர்களை
கண்டித்திருக்கிறாள். நிகிலா என்று அழைக்க வேண்டும் என்று கண்டிப்பு வைப்பாள்.
அதில் அடங்கியுள்ளப் பெருமிதம் பெரிது என்று உணர்ந்தாள். அப்பாவின் ஆளுமை தனக்குள்
புது உருவம் பெற்றுக் கொண்டு, அவரை விட பெரியவளாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை
உள்ளூர உணர்ந்துக் கொண்டிருந்தாள். பிளஸ் டூ, கல்லூரி வாழ்க்கையில், நிகி என்றே
அழைத்தனர். சுனிதாவை சுனி, சுசித்திராவை, சுஜி, வினிதாவை வினி என்று பிறருடையப்
பெயர்கள் சுருக்கப்பட்டப்போது, நிகிலா என்னும் பெயர் நிகி ஆனது. அதில் தோழையின் நெருக்கும்
இருப்பதால் அதைப் பெரும் குறையாகப் பார்க்கவில்லை.
நிகிலா என்னும் பெயர் அவர்களின்
கதையாடலில் இடம் பெறவில்லை. ‘மத்த ஊர்
மயக்கி இருக்குது இல்ல’ என்று தான் அன்றையை பேச்சை
ஆரம்பித்தாள் அவ்வீட்டின் மூத்த மருமகள் விஜிலா. ‘அது’ என்ற அஃறிணைச் சொல்
பயன்படுத்துவதில் அவள் தனிக்கவனம் செலுத்தினாள். “இண்ணைக்கு புதிய டிரஸ் போட்டு சுத்தப் போயிருக்கு” என்று பேச்சுத் தொடர்ந்தது. அந்த ஆடை நிகிலாவுக்கு அழகு
சேர்க்கிறது; அவள் கம்பீரமாகவும் நளினமாகவும் இனிமையாகவும்
இருக்கிறாள் என்று அவளைப் பாராட்டும் சொற்கள் எதுவும் வரக்கூடாது என்பதில் மிகவும்
கவனம் செலுத்தினால் விஜிலா. உள்ளுக்குள் நிகிலா அப்படித்தான் இருக்கிறாள் என்பதை
ஏற்றிருந்தாள். அழகை இரசிக்கும் பாராட்டும் மனநிலை இயல்பாக கைகூடவில்லை. திருமணம்
ஆகி விஜிலாவுக்கு ஐந்தாண்டுகள் முடிந்தன. பிள்ளைகள் இரண்டு பேர் உள்ளனர்.
மகிழ்ச்சியென்றால் மகிழ்ச்சிதான் இல்லையென்றாலும் நீங்கள் சொல்வது சரிதான். நிகிலா
போட்டுச் சென்ற ஆடையை இவளுடைய கணவன் போடுவதற்கு அனுமதிப்பதில்லை. ஓரிரு முறை,
புத்தாண்டுக்கு எடுக்கலாம் என முயற்சித்தாள். கணவனின் தடைச்சொல் அவளை எடுக்கவிடவில்லை.
குடும்பத்திற்கு ஒத்துப்போனால் நல்லதுதானே. எதற்கு வீண் சிக்கல்கள் என்னும்
மனநிலையை அவள் சமூகத்திலிருந்து பெற்றிருந்தாள். அதை அவளுக்கு கொடுப்பதில்
பிறந்தகமும் புகுந்தகமும் தனிக் கவனம் செலுத்தியது. மகிழ்ச்சி உயர்தர, நவீன
ஆடைகளில் இல்லை என்ற தத்துவங்களையும் அவள் இடையிடையேச் சொல்லி தன்னையே சமாதானப்
படுத்தியிருந்தாள். பெண்சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம் நாம். இல்லை,
அது குடும்பத்திற்கு அழகு, மனமொத்துப் போதல் நல்லது போன்றவற்றை அவள் சவுகரியமான
வாதங்களாக ஏற்றிருந்தாள். விஜிலா தன்னுடைய வார்த்தைகளால் நிகிலாவை எவ்வளவு
கொச்சைப் படுத்த முடியுமோ அவ்வளவுக்கு கொச்சைப்படுத்தினாள். அத்தோடு குடும்பமே
அவளின் உரையாடலோடு கலந்து கொண்டது. அவர்களுடைய மாலை வேளை குதூகலத்திற்கு அவள்
மையமாக மாறிக்கொணடு வந்தாள். பேசிக்கொண்டே இருந்தார்கள் ஒவ்வொன்றாக. ஒவ்வொரு முறை
பேசி முடிக்கும் போதும், நிகிலா அவர்களின் வார்த்தைகளுக்குள் அடங்காமல்
போய்க்கொண்டிருந்தாள். அவர்களுடைய இழிச்சொற்கள் எதுவும் அவளை முழுமையாக அழித்து
விட முடியாதவனவாய் மாறிக் கொண்டிருந்தன. தங்களுடைய மொழிகள் எல்லாம் சுய
கழிவிரக்கத்தின் எச்சங்களாக புறந்தள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. பேச்சுக்கள் வழியாக
ஆனந்தம் அடையலாம் என்ற முயற்சிகள் எல்லாம் தோல்வியைக் தழுவிக் கொண்டிருந்தன.
நிகிலா அதிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுப்பட்டு உதித்தெழுந்து கொண்டிருந்தாள்.
தங்களுடைய பேச்சுகள் அனைத்தும் இன்பத்தை விடவும் துன்பத்தையே வருவித்துக் கொண்டிருந்தன.
விஜிலாவின் கணவனுக்கு விஜிலா அழகில்லையோ என்ற புழுக்கம் மனதிற்குள் எழுந்த
வண்ணமாய் இருந்தது. நிகிலாவைப் பற்றிப் பேசும் கணவன் என்னை விட அதிகமாக அவளைக்
கவனிக்கின்றானோ... போன்ற சந்தேகங்கள் மேலெழும்பிக் கொண்டிருந்தன.
நிகிலா அப்பாவின் பிரியமானப்
பிள்ளை, அம்மாவின் பாசத்திற்குரியவள், அவள் அவர்களுடைய உணர்வுகளோடு கலந்தவள். அவளின்
வளர்ச்சியிலும் சுதந்திரமான நடத்தையிலும் பெருமை கொண்டவர்கள். அவள் உடலும் உள்ளுமும்
கொண்ட மதிப்புக்குரிய அன்புக்குரியவளாய் இருந்தாள். அவர்களைத் தாண்டிப் பெரிய
மனிதையாக மாறுவாள் என்பதில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள்.
குடும்பத்தின் அழகுப் பாசமிகு
அன்பு மகள்கள், நண்பர்களின் உயிர்த்தோழிகள் புறம் வெளியில், கல்வியகங்களில் பொருளாக
மாற்றப்படுகிறாள். அதை பெண்களைப் பெற்றெடுத்தவர்களே ஊக்குவிக்கிறார்களோ? அதற்கு பெண்களும் சொம்பு சுமக்கிறார்களோ? சுயம் இழந்து பொதுவெளியில் அசிங்கம் சுமந்து நடக்கும்
மான்யஸ்தர்கள்... போலி உறவுகள். மனசாட்சியைக் கொன்று இரத்தம் குடிக்கும்
இழிநிலைகள் இன்றும் தொடர்கின்றன.
நிகிலா அழகாய் வலம்
வந்தாள். பொருளாய்ப் பார்க்கும் அனைத்துக் கண்களையும் பொசுக்கிக் குருடாக்கும் திமிருடன்.
பார்வைகளையும் பேச்சுக்களும் அவளுடைய ஆனந்தத்தை விழுங்கும் ஆற்றம் இழந்து போயின.
அவள்கள் பேசிய வழிகளில் அவள் புது மொழி எழுதிச் சென்றாள், அவர்கள் பார்த்தப்
பார்வைகளில் ஒடுங்காமல் அசுர பலத்துடன் பெரு உருவம் கொண்டு நகர்ந்தாள், அவர்கள்
வரையறுத்த ஆடை ஆலங்காரத்தின் எல்லைக் கோடுகளை கிழித்தெறிந்து எல்லை மீறி வண்ணங்களாய்
திரிந்தாள்.
0 கருத்துகள்