அண்டங்களைக் கடந்த பகிர்ந்துண்ணல் | அ. சந்தோஷ்

மனிதர்கள் தீவுகளாய் மாறிப்போகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு இன்றைய தலைமுறையினர் மீது உண்டு. அக்கப்பக்கத்தில் யார் வாழ்கிறார், அவர் என்ன தொழில் செய்கிறார், அவருடைய குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பவற்றை பற்றி யாரும் கவலை கொள்வதுமில்லை, அதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. தங்களுக்கென்றுள்ள சொந்தங்களுடன் மனிதர் வாழப் பழகி வருகிறார்கள். குறிப்பாக அலைபேசிகளின் வருகையால் அக்கம் பக்கத்தாரின் உறவுகளை அதிகம் யாரும் விரும்புவதுமில்லை.


photo: pixabay

ஊரடங்கு நாட்களில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். உணவு எல்லாருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று பொருள் இல்லை. சில வேளை குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் கிடைக்கின்ற உணவை பகிர்ந்துண்கிறார்கள். கிடைத்தப் பொட்டலங்களைத் திறந்து வைத்து நான்கு பேர், ஐந்து பேர் என வட்டமாக உட்கார்ந்தவாறு உண்ண ஆரம்பிக்கிறார்கள். தேவையில் உள்ளோர் யாருமில்லை என்பதிற்கிணங்க, அங்கே இருப்பவர்களுள் யாரும், ஒருபிடி உணவாவது உண்ணாமல் தூங்கச் செல்லக்கூடாது என்பதில் உறுதியாய் உள்ளனர். அங்கே அவர்களுக்கிடையே தடையாய் நிற்கும் வேலிகள் இல்லை மதில் சுவர்கள் இல்லை.

அண்டை வீட்டுக்காரன் உணவு உண்டு நன்றாக இருக்கிறானா என்னும் அக்கறை கூட கொள்ளாத அளவுக்கு பகைமையும் வெறுப்பும் தாண்டவம் ஆடும் இவ்வுலகில், பொது இடத்தில் தங்கி இருத்தல் ஒன்றே பொதுவாக கொண்டிருக்கும் அவர்கள் பகிர்ந்துண்கிறார்கள். சொந்தமென செல்வங்கள் இல்லாமல் இருந்தால், உறவுகள் தானாக மலர்ந்துவிடும் போல...  

கருத்துரையிடுக

0 கருத்துகள்