சாகவே பயமாகிப் போய்விட்டது இப்போது எல்லாம். உண்மையைச் சொன்னால் செத்துப் போவதில் அல்ல பயம். அதன் பின் நடக்கப் போவதை நினைக்கும் போது தான் பயம் அதிகரிக்கிறது. அது எப்படி அடக்கம் செய்வார்கள்? என்னென்ன செபம் சொல்வார்கள்? எத்தனை பேர் வருவார்கள்? எப்படிக் கல்லறை அமைப்பார்கள்? கல்லறையை எந்தக் கல்லால் மூடுவார்கள்? அதன் மேல் என்ன எழுதி வைப்பார்கள்? பிரசங்கம் யார் வைப்பார்கள்? அவர் பிரசங்கிக்கும்போது என்னென்னச் சொல்லப் போகிறார்? ஊரார் என்னச் சொல்லப் போகிறார்கள்? போன்றவற்றால் எவ்விதப் பயமும் இல்லை. அது எப்படி அமைவதாயினும் அமைந்து விட்டுப் போகட்டும். இதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையும் இல்லை, பயமும் இல்லை.
ஆக, சாவதைப் பற்றியும் கவலை இல்லை, நல்லடக்கச் சடங்குகளைப் பற்றியும் கவலை இல்லை, பங்கேற்போரைப் பற்றியும் பயம் இல்லை.
பயம் இந்த இணையத்தைப் பார்த்துத் தான். முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப்... இதையெல்லாம் நினைக்கும் போது குலை நடுங்குகிறது. எனது போட்டோ போட்டு, உலகறியச் செய்வார்களே.... ஐயோ பெரும் பயம் என்னைத் தொற்றுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் குரூப்ஸ் இருக்கின்றன. நானும் குறைந்தது பத்திலாவது இருப்பேன். அதில் போட்டோ போட்டு, நல் மனம் படைத்தவர் என்று சொல்பவர் இரங்கல் தெரிவித்து, இவருக்காக செபிப்போம் என்று கூறுவார். அவர் செபித்து விட்டுத்தான் போட்டாரா என்பது தான் பெரிய கேள்வி. அது போகட்டும். அதன் பிறகு, உடனே, ஆழ்ந்த இரங்கல்களுடன் நிறைய பேர் தோன்றுவார்கள். RIP என்று சொல்லிக் கொண்டு. RIP இன் அர்த்தம் கூட பலருக்குத் தெரியுமா என்பது பெரிய கேள்வியே. உண்மையில் இவன் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று செபிப்பார்களா? குறைந்தது மனப்பாடம் செய்து வைத்திருக்கும் ஒரு செபத்தை முழுக்கவனத்துடன் சொல்லவில்லையென்றாலும் பரவாயில்லை. உதட்டளவிலாவது சொல்வாரா? ஐயோ என்னை வைத்து அவர்கள் நல்லவர்களாக மாறிக் கொண்டிருப்பார்கள். இறைபக்தர்களாக வரிந்துக் கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிடுவார்கள். ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பார்கள். உடன்வாழ்ந்தவனை பிரிந்து தவிக்கும் குடும்பத்தாருள் ஒருவருக்காவது போண் செய்து, இரங்கல்களை தெரிவிப்பார்களா என்றால் இல்லை.
முகநூலை நினைத்தால் இதை விட பயமாக இருக்கிறது. யார் யாருக்கோ எல்லாம் என் போட்டோ சென்றடையும். அவர்கள் எனது போட்டோக்களை தொந்தராவாகப் பார்ப்பார்கள். அழகான போட்டோ இல்லையென்றால், காலையிலே Mood Off பண்ண ஒரு மூஞ்சியப் போட்டிருக்கானுங்க என்று திட்டி விடுவார்கள். ‘இவன் இருந்தா என்ன, இல்லெண்ணா என்ன?’ என்று சிலர், துடைத்தெறிவார்கள் (Mobile தொடுதிரையைச் சொன்னேன்).
இதைவிட மோசமானது என்னவென்றால், என்னை வைத்து பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். உலகோர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று, எனது போட்டோவைப் போட்டு, சமூக சீர்திருத்தவாதிகள், சமூகநலவாதிகள் பெரும் கட்டுரைகளை எழுதுவார்கள். வீடியோக்களைப் போடுவார்கள். சிலர் என்னைக் கடுமையாக சாடுவார்கள். இவன் கவனிக்கவில்லை, பொறுப்பற்ற மனித ஜென்மம் என்று கடுமையாக விமர்சிப்பார்கள். இவன் எத்தனை பேருக்கு நோயைக் கொடுத்து விட்டுப் போனானோ தெரியவில்லை என்று கன்னாபின்னா என்று புலம்பித் தள்ளுவார்கள்.
நான் சார்ந்திருக்கும் சங்கத்து ஆட்கள், என்னப் பற்றி அக்குவேறு ஆணிவேராக அலசிப்பார்ப்பார்கள். எந்தெந்த சூழ்நிலைகளில், தொற்றுப் பரவியது என்று தெளிவெடுப்பார்கள். எனது செயல்பாடுகள், என்னைச் சந்தித்த மனிதர்கள், அவர்கள் எங்கிருந்தெல்லாம் வந்தார்கள் என்றெல்லாம் நோண்டி நொங்கெடுப்பார்கள். பிறகு, அதை வைத்து, பெரிய Presentation நடத்துவார்கள். எனக்காக அல்ல, மாறாக பிற சங்கத்து ஆட்கள் எப்படி என்னைப் போல் இறந்துப் போகக் கூடாது என்பதற்காக. அவர்களுக்கு பல நாட்கள் சங்கத்து தலைவரும் அவருக்கு துணை நிற்கும் உடன் உழைப்பாளர்களும் பாடம் எடுப்பார்கள். போதாக்குறைக்கு, என்னைப் பற்றிய இரங்கல் செய்தியை நீளமாகச் சங்கத்துத் தலைவர் அவர்கள் எழுதுவார்கள். அதில் எனது நல்லவைப் பற்றி சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும். நான் எப்படி இறந்தேன் என்ற சிந்தனைகளும் அதற்குள் அடங்கி இருக்கும். அவை சிந்தனைகள்தான். பிறரின் தியானத்திற்கான தியானைச் சிந்தனைகள். எப்படி இறக்கக் கூடாது என்பதற்கானப் பெரிய பாடம். இதில் சங்கத்துத் தலைமையில் என்னைப் பிடிக்காதவர் எவராவது இருந்தால், எனது சாவை பெருமளவு கொண்டாடுவார். நீங்கள் நினைக்குப்படி சிரித்து அட்டகசித்து, பெரும் விருந்துண்டு அல்ல. தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் போண் போட்டுச் சொல்வார். அவர் உள்ளம் எப்படி எனது இழப்பை நினைத்து வருந்துகிறது என்பதை வெளிப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவார். இது மனிதருக்கு கைவந்த கலை அல்லவா. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி, அதை மூலதமானமாக மாற்றுதல். என்னையும் நான் சார்ந்திருக்கும் சங்கத்தையும் எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் என்பதை காட்டுவதற்காக என்னை எனது சாவைப் பயன்படுத்திக் கொள்வார். ஐயோ தலையே சுற்றுகிறது... இப்போது புரிகிறதா நான் சாக ஏன் அஞ்சுகிறேன் என்று.
மேலும், என்னைப் போன்றவர்கள் என ஒரு பெரிய பட்டியல் உருவாக்குவார்கள். அதில் என் பெயரும், எனது போட்டோக்களும் இடம் பெறும். ஐயோ, என்னை பெருங்கூட்டத்தின் ஒரு அங்கமாக்கி விடுவார்கள். அது உலகெல்லாம் பரவும். அதை வைத்து, மாவட்ட, மாநில, தேசிய, உலகளாவிய விவாதங்கள் நடைபெறும், பெருந்தொற்றின் இரையாக என்னையும் கூட்டத்தில் சேர்த்து விடுவார்கள்.
இப்போது சாகவே பயம். செத்தால், உள்ளத்திலும் உடலிலும் வருந்தும் பத்துப் பேர் வந்து அடக்கம் செய்து விட்டுப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும். யாரும் எதிலும் போட்டோக்கள் போட வேண்டாம். உலகம் அறிய எந்த முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டாம். விடமாட்டார்கள். கொண்டாட இரை கிடைக்க வாய்பிளந்தல்லவா நிற்கிறார்களும் மனிதர்களும், ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும், அரசுகளும், சங்கங்களும்... என்னை நினைத்தால் ஒரு கழிவிரக்கம் தோன்றுகிறது. சுய பச்சாத்தாபம்.
0 கருத்துகள்