கத்தோலிக்க அருட்பணியின் கருப்பொருளுக்கு உயிர் கொடுத்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி | அ. சந்தோஷ்

அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களை அரசுக்கு அச்சுறுத்தலாகப் சித்தரிப்பதில், அவர் சுமந்திருந்த மத அடையாளமும் காரணமாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் கிறிஸ்தவர் மட்டுமல்லாமல், அதை போதிக்கவும் மக்களை அம்மதத்தில் வளர்த்தவும் பயிற்சி பெற்றவர் என்னும் சமூகக் குறிப்பீடுகள் அவருடைய வாழ்வோடு பிணைக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான வழிபாடுகளுக்குள் மதத்தை ஒதுக்காமல், மக்களின் உரிமைகளுக்காக உழைப்பதில் அம்மதத்தின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார். இது அவர் கொண்டிருந்த மதிப்பீடுகள், உளப்பாங்கு ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்தது. அதை அவர் சார்ந்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவம் கொடுத்தது என்பதை மறந்திட இயலாது. 



இயேசுவின் “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது” (மத் 5:10) என்னும் வார்த்தைகளும், “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” (யோவா 18: 37) என்னும் வார்த்தைகளும் பல அர்த்தத் தளங்களைக் கொண்டவை. கிறிஸ்தவர்களின் நீதிக்காக போராடுதல் என்றோ அவர்களின் மதக்கோட்பாடுகளின் உண்மைகளை எடுத்துரைப்பது என்றோ மட்டும் இதற்கு அர்த்தம் இல்லை. அருட்தந்தை என்பவர், மதபோதனை செய்து, நீரால் முழுக்குக் கொடுத்து கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ‘தேசவிரோதச்’ செயலில் ஈடுபடுவபர் என்னும் கோட்டுக்குள் முடக்கும் வாசிப்பை இயேசுவின் வார்த்தைகள் எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை. காலனியாதிக்கத்தாலும், வாளாலும் வன்முறையாலும் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்னும் வரலாற்று வாசிப்புகள் பல நிகழ்வுகளுடன் ஒத்துப் போனாலும் கிறிஸ்தவத்தின் மையக்கருவுடன் எவ்விதத்திலும் ஒன்றித்துப் போவதாக இல்லை. மையக்கருப்பொருளுக்கானத் தேடலை கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தார் பல வேளைகளில் முன்னெடுத்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில், இரண்டு உலப் போர்களுக்குப் பின்னர் கூட்டப்பட்ட இரண்டாம் வத்திக்கான் சங்கம் என அறிபயப்படும் பேரவையானது, மானிடர் ஒவ்வொருவரும் கடவுளின் சாயலைப் பெற்றவர்களாக இருப்பதனால் சம மாண்புடன் உலகில் பிறக்கிறார்கள் என்னும் அடிப்படையை முன்வைத்தது. மனிதம் காக்கும் பணியில் அனைவரும் (நாத்திகர்கள் உட்பட) தோளோடு தோள் சேர்ந்து உழைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தது. “இன்றைய உலகில் வாழும் மனிதர்கள் குறிப்பாக, ஏழையர் மற்றும் துன்புறுவோரின் மகிழ்வும் எதிர்நோக்கும், ஏக்கமும் கவலையும், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருடையவும் மகிழ்வாகவும் எதிர்நோக்காகவும் ஏக்கமாகவும் கவலையாகவும் உள்ளது. மனிதத்தை முன்னெடுக்கும் மானிடச் செயல்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்தவர்களின் மனதில் அதன் அதிர்வலையை உருவாக்குகிறது” (வத்திக்கான் திருச்சங்கம், இன்றைய உலகில் திருச்சபை (GS) 1). உலகில் நிலவும் பண்பாட்டு, சமய பன்முகத்தை மதிப்பதோடு அவற்றோடு ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொண்டு மனிதத்தை தழைக்கச் செய்ய உழைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான அழைப்பை திருச்சபை ஏற்றுக்க கொண்டு அதை முன்வைத்தது. மாறி வரும் சமூகத்திற்கு உகந்த முறையில் கிறிஸ்துவின் விழுமியங்களை எடுத்துரைக்க புதுமைக்கான சாளரங்களை விசாலமாகத் திறந்தது. அது மட்டுமல்லாமல், ஏழைகள் துன்புறுத்தப்படுவோரின் காரியங்களில் தனி அக்கரை செலுத்த வேண்டும் என்பது இங்கே “குறிப்பாக ஏழையர் மற்றும் துன்புறுவோர்” என்னும் சொல்லாடல் வழியாக முதன்மைப் படுத்தப்பட்டது. இதற்கு “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத் 25:40) என்னும் இயேசுவின் வார்த்தைகள் ஊக்கியானது. ஏழைகள் மற்றும் துன்புறுத்தப்படுவோர் எனப்படும் சிறியவர்களை கவனிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இவையும் இவற்றின் பகுதியாக வெளிவந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு கூறுகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல கிறிஸ்தவ ஆராய்ச்சி நூல்களும் மக்களின் துயர் போக்கும் பணியில் ஈடுபடுதலை ஊக்குவித்தது. இதன் பகுதியாக அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் இருந்தார்.

(Rajdeep Sardesai, https://www.youtube.com/watch?v=lZpqdnmyYSk).

கருத்துரையிடுக

0 கருத்துகள்