“அந்த மெலிந்த மனிதன் அதிகமாக யோசிக்கிறான், அவன் ஆபத்தானவன்” | அ. சந்தோஷ்

மக்கள் பணியில் முழுமையாக தம்மையே ஈடுபடுத்திக் கொண்ட அருள்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள், இந்திய அரசியல் சாசனத்தின் 224 ஆம் சரத்தின் ஐந்தாம் அட்டவணையில் பூர்வ குடிமக்களுக்காக அனுமதிக்கப்பட்ட உரிமைகளை காக்க அவர்களிடையே உழைத்தார். பெருந்நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயலும் அரசானது, மக்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களை அறியாமலே பறித்து, அவர்களை அந்நியமாக்கி, புலம் பெயர்தலுக்கும் வறுமைக்கும் தள்ளியது. அருட்தந்தை அவர்கள், ஊர் ஊராகச் சென்று இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி எடுத்துக் கூறி, உரிமைகளுக்காக குரல் கொடுக்க அவர்கள் மத்தியி்ல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரும் அவரோடு சேர்ந்த இன்னும் பலரின் முயற்சிகளின் பலனாக PESA (Panchayat (Extension to the Scheduled Areas) Act, 1996) கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் கிராம் சபாவினுடன் உரையாடல் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் சம்மதத்துடன் நிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்னும் உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பிப் போராட்டங்களை முன்னெடுத்தப் போது, பலர் மீதும், நக்சல்கள் என்னும் முத்திரைக் குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் (2000) 66A ஆனது திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்ட அதன் பேரில் தேசத்துரோகம் வழக்குகளும் பதிவுச்செய்யப்பட்டன. பூர்வ குடிகளின் இளையத் தலைமுறையினர் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். மாத வருவாய் 3000 கூட ஈட்ட முடியாத குடும்பங்களால், தங்களது பிள்ளைகளை பிணையில் எடுப்பதற்காக வழக்கறிஞருக்கு கூலி கொடுக்கும் நிலையில் இல்லை. தங்களது குடும்பங்களுக்காக பணம் ஈட்டும் பணியைச் செய்த ஆண்கள் நக்சல்கள் என முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதால், குடும்பங்கள் வறுமையில் வாடின. இதைக் கண்ணுற்ற அருட்தந்தை அவர்கள் சுதா பரத்வாஜ் உட்பட்ட பதினைந்து பேரின் உதவியுடன் Persecuted Prisoners Solidarity Committee என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். இவர்கள் மத்தியப் பிரதேசம், சட்டீஷ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த, நக்சல் என்னும் முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்களை சேகரித்தனர். 3000 க்கும் மேற்பட்டவர்கள் பொய் குற்றம் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்களின் விடுதலைக்காக, வழக்கு ஒன்றை 2017 ஆம் ஆண்டு அருட்தந்தை அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். விலாவாரியாக தகவல்கள் ஒப்படைத்ததும், இந்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் அருட்தந்தையைக் கொண்டு வந்தது. இதைப் பற்றி அருட்தந்தை அவர்கள் 2020 ஆம் ஆண்டு எட்டாம் தேதி, கைது நடப்பதற்கும் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட காணொளியில் தெளிவாகச் சொன்னார்.



மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த நைந்த மனிதர் சர்வ அதிகாரமும் படைத்த அரசின் கண்களில் துரும்பாக மாறினார். தேசியப் புலனாய்வுத் துறையால், சட்டவிரோதமான செயல்கள் சட்டம் 1967 (Unlawful Activities (Prevention) Act  - UAPA) இன் கீழ் கைதுச் செய்யப்பட்டார். அவரின் மடிக்கணினி, கைபேசிகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. அருட்தந்தை தடைச் செய்யப்பட்ட நக்சல் குழுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்னும் குற்றத்தை நிரூபிப்பதில் தேசிய புலனாய்வுத் துறை எவ்வித துரிதமும் காட்டவில்லை. திருட்டுத்தனமாக, அருட்தந்தை மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட மற்ற பதினைந்து நபர்களின் மடிக்கணினிகளின் திட்டமிட்டு நச்சுநிரல் (Malware) மூலம் தகவல்களைப் புகுத்தின என்பதற்கான ஆதாரங்களும் வெளிவந்தன (https://www.ndtv.com/india-news/arsenal-consulting-report-stan-swamy-others-said-evidence-was-fabricated-new-report-backs-that-2480532). பார்க்கின்சென்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அருட்தந்தை அவர்களுக்கு அவர் பயன்படுத்தி வந்த நீர் உறிஞ்சி கோப்பைக் கொடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் எழுதிய நாடகமான ஜூலியஸ் சீசரில், சீசர் அந்தோணியிடம் கூறுவதாக வருகிறது இந்த வார்த்தைகள்: “காஷியூஸ் மெலிந்து வறுமையின் தோற்றம் கொண்டுள்ளான், அவன் அதிகமாக யோசிக்கிறான். இப்படிப்பட்ட மனிதர்கள் ஆபத்தானவர்கள். (Act I, scene 2 of Shakespeare’s Julius Caesar). சீசர் கொழுத்தவர்கள் தனக்கு வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். கொழுத்தவர்கள் யார் என்னும் வாசிப்பை வாசகர் பட்டியலிட்டுக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்