பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் கலந்து கிடக்கும் அரசியல் | அ. சந்தோஷ்

தொடக்கமாக

இருத்தலின் வெளிப்பாடே செயல்கள்” என்னும் தத்துவமானது கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் தொடங்கி இருந்து வருகிறது. “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்” (மத் 7:17) என்னும் விவிலிய வாக்கியம் மெய்யியல் தத்துவம் உணர்த்தும் செய்தியை தெளிவாக முன்வைக்கிறது. நல்ல மனிதர் நற்செயல்களை செய்வர்; தீய மனிதர்கள் தீயச் செயலைச் செயவர் என்பது பட்டவர்த்தனமான பொருள். ஒரு மனிதர் நல்லவராக அல்லது தீயவராக தன்னை நிறுவிக்கொள்வதிலும், அதை சமூகம் அங்கீகரிப்பதிலும் அவரின் நடத்தையானது அடிப்படையாக மாறுகிறது. அப்படியானால் அம்மனிதர் தன்னுடைய நடத்தையை திட்டமிட்டப் படி அமைத்துக் கொள்தல் அவசியமாகிறது. நடத்தையை அமைத்துக் கொள்வதற்கு, அவரின் நம்பிக்கைகள், சமூக விதிமுறைகள், உளப்பாங்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எண்ண ஓட்டம் அவருக்குள் நடந்தேற வேண்டும். தான் சந்திக்க இருக்கும் சமூகச் சூழலில் தனது நடத்தையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்னும் திட்டமிடுதல் இந்த எண்ண ஓட்டத்திற்குள் அரங்கேறுகிறது. இவ்வெண்ண ஓட்டமானது, அம்மனிதர் நோக்கமாகக் கொள்ளும் நடத்தையை சமூகத்தில் செயலாக மாற்றிட காரணமாக அமைகிறது. வெற்றிகரமாக நடத்தப்படும் செயல் வழியாக எண்ணிய நோக்கம் நிறைவேறுகிறது. ஆக செயலுக்குக் காரணங்களாக (Causes) ஒருவருடைய நம்பிக்கைகள், உளப்பாங்குகள், சமூக விதிமுறைகள் காரணங்களாக அமைகின்றன எனவும், அவர் தனது நடத்தையை சமூகத்தில் வெளிப்படுத்தும் செயலானது விளைவு (Effect) எனவும் வரையறுக்கலாம். அன்றாட சமூக வாழ்வின் செயல்பாடுகள் இத்தகைய இயங்கு நிலையின் வெளிப்பாடாகவே உள்ளுவதெல்லாம் நடைமுறைக்கு வருவதில்லை என்பது உண்மை. காரணம்-விளைவு எனப் பிரித்தல் சரியான சமூக உளவியல் பார்வையாக அமைவதில்லை. ஏனெனில், நம்பிக்கைகள், உளப்பாங்கு, சமூகக் காரணிகளில் அன்றாட வாழ்வியல் சார்ந்த சமூகக்குறிப்பீடுகள் ஏராளமாக இழையோடிக் கிடக்கின்றன. உள்ளுக்குள் இருப்பவை, சமூகத்திலிருந்து வேறுபடுத்தப்பட்ட, எவ்வித தொடர்பும் இல்லாத ஒன்றாக இல்லாமல், அவற்றின் குறிப்பீடுகளைக் கொண்டவைகளாக இருக்கின்றன. அதாவது, தனி மனித உள்ளத்தில் இருப்பவற்றின் நீட்சிகளே சமூகத்திலும் பரவிக் கிடக்கின்றன, அவ்வாறே சமூகத்தில் கிடப்பைவையும் உள்ளுக்குள் ஊடுருவிக் கிடக்கின்றன. அன்றாட நடத்தையானது, உள்ளும் புறமும் சார்ந்த ஒத்தமைவின் செயல்களாக அரங்கேறுவதற்கு, துணையாக இருப்பவற்றை சமூகக் குறிப்பீடுகள் என்று சமூக உளவியலாளர்கள் அழைக்கிறார்கள். இக்குறிப்பீடுகள், சுய கவுரவம், சுய பாதுகாப்பு ஆகிய பலவற்றால் வழிநடத்தப்படும் போது, அவை அவர்களை சமூகத்தோடுப் பிணைக்கும் அதே வேளையில் சில குழுக்களோடு கலக்காமல் இருப்பதற்கான விதிகளையும் அமைத்துக் கொடுக்கின்றன. இதை அரசியல் தலைவர்கள் ஆதாயமாக்கிக் இந்தியாவில், சமயம் சார்ந்த பல்வேறு மக்கள் குழுக்களின் சமமான மக்கள் தொகைக் பங்கீடு நடக்கவில்லை என்னும் காரணம் காட்டி சிறுபான்மையினர்/பெரும்பான்மையினர் எனத் துண்டாடி, அரசியல் லாபங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.   

திட்டமிட்ட நடத்தைக் கோட்பாடு

நம்முடைய அன்றாட வாழ்வின் நடத்தை (Behaviour) எப்படி அமைகிறது? அல்லது எவற்றின் துணைகொண்டு நடத்தையை உருவாக்கிக் கொள்கிறோம் என்று பொதுவாக ஒரு கேள்வி எழுப்பினால் இரண்டை நாம் முன்வைக்கலாம். முதலாவதாக, உலகைப் பற்றிய நம்முடைய அறிவைச் சார்ந்ததாக இருக்கிறது எனலாம். அதாவது, உலக நடப்பு, சமூக நிகழ்வுகள், சந்திக்கும் மனிதர்கள், எதிர்கொள்ள இருக்கும் சூழல்கள் போன்றவற்றைப் பற்றிய முன்னறிவு. எடுத்துக்காட்டாக, ஒரு வணிக ஒப்பந்தத்திற்காக புறப்படும் ஒருவர், ஒப்பந்தந்தத்தின் தன்மை, ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிறுவனம், சந்திக்க இருக்கும் மனிதர்கள், இடம் போன்றவற்றை அறிந்தவராக இருப்பார். இரண்டாவதாக, நாம் எந்நிலையை அடைய விரும்புகிறோமா அல்லது எந்தெந்தக் காரியங்களை அடைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தையை திட்டமிடுகிறோம். அதாவது, ஒப்பந்தம் செய்ய இருக்கும் மனிதர், அவவொப்பந்தத்தின் வழியாக, எதை அடைய வேண்டும் என்றும் உள்ளத்தில் நினைத்திருக்கிறாரோ அதை மனதில் வைத்து தனது நடத்தையை அமைத்துக் கொள்வார். ஆக வெளியுலகைச் சார்ந்த ‘பொருட்களைப்’ (Objects) பற்றிய அறிவும், அது உருவாக்கும் உளப்பாங்கும் சமூகத்தில் தனிநபரின் நடத்தையை தீர்மானிக்கின்றன என்பது பொது அறிவின் (Common Sense) பகுதியாக இருக்கிறது.  இவ்வகையில்தான் சமூகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முன்னெடுப்புகளும் அமைகின்றன எனலாம். இப்பொது அறிவை அடிப்படையாகக் கொண்டு பல உளவியல் கோடப்பாடுகள் தோன்றி அவை தங்களது விளக்கங்களைத் தந்திருக்கின்றன. 

தனிமனித உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசிய ‘தற்செயற்திறன்’ (Self-Efficacy) என்னும் கோட்பாடானது, தனிநபருக்குள் நடக்கும் உள்ளார்ந்த அறிவுசார் சிந்தனை ஓட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அமைத்துக் கொள்ள விரும்பும் நடத்தையை செயல்படுத்துவதற்கான அறிவுசார்ந்த செயலில் ஈடுபடுவதன் வழியாக, உருவாக்கிக் கொண்ட அறிவின் அடிப்பைடையில் செயல்படுகிறார். இக்கொள்கையை மேலும் முன்னெடுத்த பண்டூரா (Bandura) கூறும்போது, ஒன்றை அடைய வேண்டும் என்ற தீவிரமான ஆசையை உள்ளத்திற்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒருவர், அதை தன்னால் அடைய முடியும் என்று நம்புபவர், வெளிப்படையான தடைகள் வராமல் இருக்கும் பட்சத்தில் அதை அடைகிறார் என்றார்.

மேலும், ‘உள்ளம்-நடத்தை’ என்னும் இணையை முன்னெடுத்த சில சமூக உளவியலாளர்கள்  ‘திட்டமிட்ட நடத்தைக் கோட்பாட்டை’ (Theory of Planned Behaviour) முன்வைத்தார்கள். இதன்படி ஒருவருக்குள் திட்டமிட்ட அறிவார்ந்த இயங்குநிலை (Cognitive Process) நடக்கிறது என்று கூறினர். அதாவது, நடத்தையை அமைத்துக் கொள்ள விழைபவர்,   உளப்பாங்கு, நம்பிக்கைகள், தனிவாழ்வு சார்ந்த விதிமுறைகள் மற்றும் சந்திக்க இருக்கும் சூழலை எதிர்கொள்வதற்கு அவசியமாக இருக்கின்ற காரணிகள் ஆகியவற்றை தனது அறிவுக்கு உட்படுத்தி எண்ணிய நோக்கத்தை நிறைவேற்றுகிறார் என்பதை இக்கோட்பாடு விளக்கியது. அறிவுசார்ந்த செயலின் வெளிப்பாடாக நடைமுறைப்படுத்தப்படும் அந்நடத்தை வெற்றிகரமாக அமைந்தால் அவர் கருதிய நோக்கமானது நிறைவை அடைகிறது.

இக்கொள்கையானது காரணம்-விளைவு (Cause-Effect) என்னும் தொடர்புக் கண்ணியை முன்வைக்கிறது. உளப்பாங்கு, மனநிலைகள், விதிமுறைகள், நம்பிக்கைகள், நடத்தைச்சார்ந்த நோக்கங்கள் போன்றவை காரணங்களாக முன்வைக்கப்படுகையில், செயலாக்கம் பெறும் நடத்தை அல்லது, எண்ணப்பட்ட இலக்கானது விளைவாக இருக்கிறது.  காரணங்களாக இருப்பவை சமூக ஆய்வியலின் மொழியில் ‘சார்பற்ற மாறிகள்’ (Independent Variables) என்றும், வெளிப்படுத்தப்படும் நடத்தையானது (விளைவு) ‘சார்புடைய மாறி’ (Depdendent Variable) எனவும் அறியப்படுகிறது. விளைவின் எவ்வித தாக்கமுமின்றி, அதே வேளையில் மூளையில் நடக்கும் அறிவுசார்ந்த செயல்பாடு வழியாக மாற்றம் அடைவதை சார்பற்ற மாறிகள் எனவும், காரணங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விளைவுகளில் மாற்றம் ஏற்படுவதால் அவை சார்புடைய மாறிகள் எனவும் அறியப்படுகின்றது. இச்சூழலில், விளைவுகள் காரணங்களின் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லையா என்ற கேள்வி எழுவதோடு, காரணம்-விளைவு என்னும் கண்ணியில் தனி மனிதரின் நடத்தையைப் பற்றியப் புரிதலை சுருக்குவது சரியாக அமையுமா என்னும் கேள்வியும் எழுகிறது.  

நடத்தையின் மீது தாக்கம் ஏற்படுத்தும் சமூகக் குறிப்பீடுகள்

சிக்கல்கள் நிறைந்த வாழ்வியல் நடத்தையை காரணம்-விளைவு என்னும் வட்டத்திற்குள் சுருக்கிவிடுதால், மேற்கூறிய அணுகுமுறை சரியாக இருக்குமா என்னும் கேள்வி எழுகிறது. இது சமூக வாழ்வியல் சார்ந்த, குறிப்பாக, ஒரு மனிதரின் செயலை வைத்து அவருடைய நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி, அவருடைய இருத்தல் மீது தீர்ப்புகளை திணித்திடும் போக்குக்கு வழிகோலுகிறது. அத்தோடு குறிப்பிட்டக் சமய, சாதீய, குலக் குழுவைச் சேர்ந்த ஒருவர் செய்வதை அக்குலம் முழுமைக்குமான நடத்தையாக சித்தரிக்கும் அபாயமிக்கப் போக்கும் சிந்தனையும் இதற்குள் அடங்கியிருக்கிறது. அதே வேளையில் அவர் சார்ந்திருக்கும் குலம், குடும்பம், சமயம் எனத் தொடர்பு படுத்தப்பட்டு ஒதுக்கிடும் போக்கும் நிலவுகிறது. இவ்வாறாக எளிமைப்படுத்தப்பட்ட காரணம்-விளைவு என்னும் ஒற்றைத் தர்க்கத்திற்குள் சுருக்குதல் அறிவு பூர்வமாக முழுமையாக ஏற்புடையது மட்டுமல்ல, மனிதரை செயல்களின் அடிப்படையில் நடத்தையையும் அவர்களின் இருத்தலையும் நிர்ணயிக்கும் போக்கும், சமூக தீர்ப்பிடுதல்களுக்கும் வழிவகுக்கும். 

ஸ்மெட்ஸ்லண்ட் அவர்களின் கருத்துப்படி, மேற்கூறிய தர்க்கவியலானது, ஒரு சமூகம் கொண்டிருக்கும் பண்பாட்டு உள்ளீடுகளின் அடிப்படையில் உண்மையென நோக்கிப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, கடவுளுக்கு சில நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினால், அதன் காரணமாக கடவுளின் நடத்தையானது அவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அமையும் என்னும் நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. வீட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் அல்லது பாதிப்புகள் நீங்க வேண்டுமென்றால் சில நேர்த்திக் கடன்களை கடவுளுக்கு நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன் அடிப்படியில் கடவுளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு நலன்கள் குடும்பத்தில் நிகழும் என்பதும் நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. ஆகையால் காரணம்-விளைவு என்னும் தர்க்கவியல் பண்பாட்டு ரீதியாக நோக்கிப்பார்த்தால் சரியாகப் படலாம். ஆனால், இத்தகைய திட்டமிடப்பட்ட காரணம்-விளைவு என்னும் கண்ணியானது வாழ்வியல் சூழலில் ஒத்துப் போவதில்லை என்பதை ‘சூழல்சார்ந்த காரணங்கள்’ (Contingent Causality) என்னும் கோட்பாடு வழியாக மறுத்துரைக்கிறார் ஸ்மெட்ஸ்லண்ட். தனிபவர் ஒருவர் அறிவுசாா்ந்த செயல்பாட்டின் பலனாக எடுத்துக்கொண்ட தீர்மானங்களுக்கு ஏற்ப தன்னுடைய நடத்தையை அமைத்துக் கொள்ளும் உறுதியுடன் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அல்லது மனிதரை அணுகலாம். ஆனால், சூழல் அவர் நினைத்த படியாக அமையாமல் புதியன பலவற்றை முன்வைக்கும். உளப்பாங்கு, நம்பிக்கைகள் அனைத்தின் மீதும் அச்சூழல் ஏற்படுத்தும் தாக்கமானது அவரது கட்டுக்குள் அடங்காமல் போய் வேறுபட்டதொரு நடத்தையை அம்மனிதரிடமிருந்து வெளிக்கொணரலாம். சிறுவயது முதல் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டு, அவர்கள் ஊட்டி வளர்த்த நன்னெறியின் அடிப்படையிலான நம்பிக்கைகளையும் உளப்பாங்கையும் கொண்டிருக்கும் பதின்வயதைத் தாண்டிய இளைஞர் ஒருவர் அதன் அடிப்படையில் தனது நடத்தையை அமைத்து வந்திருப்பார். ஆனால், அவர் வீட்டிலிருந்து விலகி, விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கத் தொடங்கும் போது, அங்கு அமையும் நண்பர்கள், கலப்புப் பண்பாட்டுச் (மொழி, சமயம்) சூழல் ஆகியவற்றோடு ஊடாடல் புரிந்து, அவர்களோடு சேர்ந்து சில செயல்பாடுகளில் ஈடுபடும் போது, செயல்களோடு சேர்ந்த நடத்தை, சார்பற்ற மாறிகளாக (Independent Variables) முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தனிநபர் விதிமுறைகள், உளப்பாங்கு ஆகியவற்றின் மீது தாக்கம் செலுத்தி மாற்றமடையச் செய்யும் என்பது வாழ்வின் யதார்த்தமாக இருக்கிறது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பை முடித்தப் பிள்ளைகளை நகர்ப்புறங்களில் படிக்கச் செல்லும் போது, காதல் ஏதும் கூடாது என்னும் நம்பிக்கைகள், உளப்பாங்கு, தனிநபர் விதிமுறைகளுடன் செல்கின்றனர். ஆனால், நகர்ப்புற நண்பர்கள் மற்றும் நிலவும் சூழல்களால் அதிலிருந்து தவறிவிடுகிறார்கள். மேலும், நகர்புறத்தில் மூன்றாண்டுகள் தங்கி காதலித்தவர்கள், வீட்டுக்குத் திரும்பி பெற்றோருடன் வாழும் மூன்று மாதங்களில் தங்களுடைய நம்பிக்கைகள் மற்றும் உளப்பாங்கிலிருந்து விலகி, பெற்றோர் சொற்படி நடக்கும் ‘நல்லப் பிள்ளைகளாக’ மாறி விடுகிறார்கள். ஆகையால், காரணங்கள் என்று முன்வைக்கப்படுகின்றவை, சார்புடைய மாறிகளால் (Dependent Variable) தாக்கத்துக்கு உட்பட்டு மாற்றம் அடைகின்றன என்பதே உண்மை. ஷேக்ஸ்பியர் எழுதிய தி டெம்பெஸட் (The Tempest) என்னும் நாடகத்தில், ‘நல்லக் கருப்பைகள் மோசமான மகன்களை சுமந்திருக்கின்றன’ (‘Good wombs have borne bad sons’) என்று மிராண்டா (Miranda) என்னும் கதாபாத்திரம், மிகவும் நல்லவரான தன்னுடைய பாட்டியின் வயிற்றில், மாமனாராகிய அந்தோணியோ என்னும் மோசமான மனிதர் வளர்ந்திருக்கிறார் என்பதை ஆச்சரியம் மேற்கொள்ளக் கூறுகிறார். இக்கூற்று சமூகக் குறிப்பீடுகள் கோட்பாட்டின் படி ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகப் பார்க்க முடியாது. காரணம், சார்பற்ற மாறிகளாகப் பார்க்கப்பட்டவை மீது, சார்புடைய மாறிகள் திரும்பத் தாக்கம் செலுத்துகின்றன என்பது உண்மையாக உள்ளது. ஆகையால் காரணம்-விளைவு என்னும் தர்க்கவியல் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுக் கூடங்களில் சில தேர்த்தெடுக்கப்பட்ட குழுக்களின் மீது சோதனைச் செய்யப்பட்டு அதை உண்மையென நிரூபிக்கலாம். அதையொத்து, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட குழுக்களில் இவை எண்பிக்கப்படலாம். இத்தகையதொரு நிலைக்குக் காரணமாக அமைவது சமூகக் குறிப்பீடுகள்.

சமூக் குறிப்பீடுகள் அன்றாட வாழ்வின் சமூக இயங்குநிலையை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன. அவை, தனிநபர் மற்றும் குழுக்கள் மற்று நபர்களுடனும் குழுக்களுடனும் மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்திலும் கலந்துக் கிடக்கின்றன. இவை உறவாடல்கள், பொருளாதார தொடர்பாடல்கள் என மனிதரின் எல்லாச்சூழலிலும் இயங்கு சக்தியாக காணப்படுகிறது. காரணம்-விளைவு என்னும் ஒற்றைத் தர்க்கவியலைத் தாண்டி தனி மனிதரின் நம்பிக்கைகள், உளப்பாங்கு, வழிநடத்தும் தனிமனிதக் கோட்பாடுகள் ஆகியவற்றில் மட்டுமல்ல நடத்தையிலும் சமூகக் குறிப்பீடுகள் கலந்துக் கிடக்கின்றன. நடத்தைகள் சார்பற்ற மாறிகளை முற்றிலுமாக சார்ந்திருக்கின்றன என்றும், சார்பற்ற மாறிகள் சார்புடயை மாறிகளால் மாற்றமடையவில்லை என்னும் இயங்கியல், சமூகக் குறிப்பீடுகள் செலுத்தும் தாக்கத்தின்படி பார்க்கும் போது ஏற்புடையதாக இல்லை. சிலர் சமூக உளவியலாளர்கள், சமூகக் குறிப்பீடுகளானது நடத்தையின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக, அதை வழிநடத்துவதாக அல்லது கட்டுப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். இத்தகையப் பார்வை காரணம்-விளைவு என்னும் ஒற்றைத் தர்க்கவியலை வேறு வடிவத்தில் முன்வைக்கிறது என்றுத்தான் கூற முடியும்.

சமூகக் குறிப்பீடுகளின் இயங்காற்றல்

தன்னிலை-மற்றவை-பொருள் என்னும் மும்முனை உரையாடலில் பகுதியாக இருக்கும் பொருட்கள் என்னும் சமூகக் குறிப்பீடுகள், நெகிழ்வற்ற திடத்தன்மை வாய்ந்தவைகளாக முன்வைத்தல் அபத்தமானது. அதாவது அவை நடத்தையோடு, சூழல்களோடு எவ்வித தொடர்பாடல்களோ தாக்கங்களோ இல்லாமல் தனித்துவமாகச் செயல்படுகிறது என்னும் புரிதல் சரியாக அமையாது. அப்பொருட்கள் பலதரப்பட்ட மனிதர்களின் சமூகம் சார்ந்த நடத்தைகளோடு கலந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பல சமய மக்கள் கூடி வாழும் சமூகத்தில் திருமணத்தில் ஒருவர் நடந்து கொள்ள வேண்டிய விதம் சார்ந்தவை வெகுவாக வேறுபடுகின்றன. பெண் ஒருவரின் பிறந்த குடும்பத்தில் இரு சகோதரர்கள் இருவேறு மதங்களில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அப்பெண்ணைப் பொறுத்தவரைக்கும் அவர் இரண்டு சந்தர்ப்பங்களிலும் வெவ்வேறு விதத்தில் தனது நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சகோதரருள் ஒருவர் இந்து முறைப்படி திருமணம் செய்கையில் அதற்கேற்ப அப்பெண்மணி நடந்து கொள்ள வேண்டும், இன்னொருவர் சகோதரர் கிறிஸ்தவர் என்றால் அதன்படி அவர் தனது நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்பெண்ணைப் பொறுத்தவரைக்கும், திருமண வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது இரு வேறு சடங்கு முறைகள் சார்ந்த நடத்தைகளின் (behaviours) படிவங்களாக (pattern) நெகிழ்ச்சி மிக்கப் (dynamic) பொருளாக (object) காணப்படுகிறது. அப்பெண்ணின் நடத்தை, ஒற்றை இயல்புடைய ஒற்றைப் பொருளைக் கொண்டிருந்தால், அவர் பங்கேற்கும் திருமண நிகழ்வுகளில் அவரின் நடத்தை உகந்ததாக அமையாது. இதற்குக் காரணம், திருமணம் சார்ந்த அந்தந்த சமயம் சார்ந்த சமூகக் குறிப்பீடுகள் என்னும் ‘பொருளானது’ தனிநபர் அல்லது குழுக்களின் நீட்சிகளாக சமூத்தில் காணக்கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, கிறிஸ்தவ முறைப்படியான திருமணச் சடங்கு சார்ந்த சமூகக் குறிப்பீடுகள் என்னும் பொருள், அக்குழுவின் நீட்சியாக சமூகத்தில் காணப்படுகின்றன. இதில் ஒருவர் பங்கேற்கும் போது, அம்மதத்தை அடையாளப்படுத்தும் முறைகளைப் பயன்படுதுதான் அவரது நடத்தை அச்சமூகத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்க இயலும். சமூகக் குறிப்பீடுகள் கோட்பாட்டின் கருதுகோளாக, “புற உலகிற்கும் தனிநபர் உலகிற்கும் இடையே வரையறுக்கப்பட்ட இடைவெளி இல்லை” என்பதை மோஸ்கோவிச்சி முன்வைக்கிறார் (“There is no definite break between the outside world and the world of the individual” (Mosovici, Psychoanalysis: Its Image and Its Public, p. 8)). உலகத்தில் புலப்படும் முறையில் தெளிவாகத் தெரியாத ஒன்றை ஒருவர் ஒருபோதும் நினைப்பதில்லை. மாறாக, தெளிவாக அடையாளம் காணப்படுகின்ற ஒன்றைத் தான் செய்வார். எடுத்துக்காட்டாக, உலகையும் அதன் ஆசைகளையும் முற்றிலும் துறந்த துறவி ஒருவர் தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்றால், தன்னுடைய செயல்களில் அவர் துறவி என்பதை உறுதிச் செய்யும் எளியச் செயல்களைச் அவரிடமிருந்து வெளிவர வேண்டும். வெளியுலகில் இல்லாத ஒன்றை, மனிதர்கள் வாழ்வில் பயன்படுத்தும் ‘பொருளாக’ இல்லாத ஒன்றை வைத்து ஒருவர் தன்னுடைய உள்நோக்கங்களையோ, தன்னுடைய நீண்ட நாள் கனவுகளையோ நிறைவேற்றும்படி செயல்பட முடியாது. ஆகையால் மனிதர்கள் சமூகத்தில் காணக்கிடக்கின்ற பொருட்களை தங்கள் செயல்களால் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கும் என, சமூகக் குறிப்பீடுகள் கோட்பாடு பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் வூல்ஃப்காங் வாக்னர் (Wolfgang Wagner) கூறுகிறார்.

ஒருங்கிணைந்த தொடர்பாடல்

சமூகத்தோடு சேர்ந்து ஒழுக வேண்டும் என்னும் சொல்லாடலானது சமூகத்தின் எண்ண, செயல் ஓட்டங்களோடு ஒத்து ஒழுக வேண்டும் என்னும் பொதுவானப் புரிதல் உண்டு. அதையும் தாண்டி, பேச்சுப் பொருட்கள் மற்றும் செய்யும் செயல்களானவை பிறர் புரிந்து கொள்ளும் விதமாகவும், அவர்களை அன்னியமாக்காத படியும் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக, பல்சமய கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர், அனைத்து மதங்களும் ஏற்கும் கருத்துக்களை முன்வைத்துப் பேசாமல் தனது சமயத்தில் காணப்படும் தனிப்பட்ட வழிபாட்டு சம்மந்தமானப் பொருட்களைப் பேசினால் அவர் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். ஒருவேளை அக்கலந்துரையாடலில் பங்கேற்கும் அம்மதத்தை சேர்ந்த பங்கேற்பாளர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம். ஆகையால் தன்னிலைக்கும்-மற்றவைக்கும் இடையே நடக்கும் தொடர்பாடலானது இரு முக்கியமான விளைவுகளைக் (Effects) கருத்தில் கொள்கிறது: முதலாவதாக, பயன்படுத்தப்படும் சமூகக் குறிப்பீடுகள் அனைத்து மக்களையும் அரவணைக்கும் உள் கட்டமைப்புகளைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும்; இரண்டாவதாக, தனிநபரின் நடத்தையையும் மற்றவர்களின் நடத்தையையும் உட்கொள்வதாக அது அமைய வேண்டும் என்பது முன்வைக்கப்படுகிறது. இவை இரண்டும் எல்லாச் சூழலுக்கும் மனித தொடர்பாடல்களுக்கும் பொருந்தும். ஒரு மனிதர் மேற்கொள்ளும் செயலின் வெற்றி என்பது அச்செயலில் தொடர்புடைய மனிதர்கள் கொண்டிருக்கும் ‘பொருட்களுடன்’ ஒத்துப் போக வேண்டும் இல்லையென்றால் அப்பொருளுக்கு இன்னொன்றை கூடுதலாக சேர்ப்பதாகவோ மெருகூட்டுவதாகவோ இருக்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த தொடர்பாடலானது சமூகத்தில் பொதுவாக நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவும் நடக்கிறது. கீழ்நிலையில் இருப்பவர், சமூகக் கட்டமைப்பின் பகுதியாக உயர்நிலையில் இருப்பவரிடம் பேசும் போது, தனக்கு இணையான உறுப்பினர்களுடன் பேசுவதைப் போன்று பேசினால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம். ஆகையால் அவர் தன்னுடைய நிலைக்கு ஏற்றவாறு பேசுவதும் செயல்களை முன்னெடுப்பதும் சாத்தியமாகிறது. 

இதற்குள் பல உள்ளீடுகளாக உள்ளன: தான் முன்னெடுக்க வேண்டியச் செயல்களைப் பற்றியத் தெளிவுகள், சூழலைப் பற்றியக் குறிப்பீடுகள் (உயர் அதிகாரியின் அலுவலகத்தில் நுழையும் போது சமூகக் குறிப்பீடுகள் எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அறிவு), தனது தனிப்பட்ட பார்வை சார்ந்த குறிப்பீடுகள் (தான் அதிகாரி முன் ஒருப் புதுக் காரியத்தை முன்னெடுக்கும் போது, அதை எவ்வாறு தன்னுடைய பார்வைகளுடன் முன்னெடுப்பது), உடன் செயல்படுவோரின் அல்லது தான் தொடர்பாடல் புரிய இருக்கும் நபரின் செயல்கள், தத்தமது நிலைகளை பேணுதல் போன்றவை உள்ளன. இத்தகையக் குணநிலையை முற்றுருவச் சார்பியம் (holomorphic) என்று அழைத்தல் சிறப்பு. மெய்யியலாரான ஹேபர்மாஸ் (Habermas) அவர்கள் இதை ‘கூட்டுறவு உண்மை’ (cooperational truth) என்கிறார்.

ஒன்றோடொன்று சார்புடைய குறிப்பீடுகளைக் கொண்ட நடத்தை

சொந்த குழுவுக்குள் மனிதர்கள் முன்னெடுக்கும் உரையாடல்களும் செயல்பாடுகளும் எவ்விதச் சிரமங்களுமின்றி எளிதில் நடந்தேறுகிறது என்பது கண்கூடு. ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழுவினரிடையே உரையாடுவதற்கும் தங்கள் வழிபாடுகளை முன்னெடுப்பதற்கும் எவ்வித சிக்கலும் இல்லை. ஒரே குழுவைச் சார்ந்தவர்கள் தங்கள் குழுவின் விதிமுறைகளை உள்வாங்கி இருப்பதால், அவர்களோடு தொடர்பாடல் புரிவதை எளிதாகப் பார்க்கிறார்கள். மனிதர்கள் தங்கள் உட்குழுவுக்குள் பேசவும் பழகவும் விரும்புகிறார்கள். இது ‘ஒத்துப் போவோரிடம் கலத்தல்’ (homogamy) என்னும் சொல்லாடல் வழியாக வரையறுக்கப்படுகிறது. ஏற்பு/நிராகரிப்பு என்னும் முரண்சார்ந்த எண்ண ஓட்டம் மனிதரை வழிநடத்தும் சூழலில், சொந்தக் குழுவுக்குள் ‘ஏற்பு’ என்பதில் மிகவும் எளிதில் சாத்தியமாகிறது. தத்தமது மாண்பை காத்துக் கொள்ளவும், உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துப்போவோரிடையே வசப்படுகிறது. அவர்கள் அதில் தங்களது சுய கவுரவத்தையும், தங்கள் சமூக உறவுகளை வலுப்படுத்தவும் செய்கிறார்கள்.

மேற்கூறிய இயல்பைப் பற்றி மேலும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால், கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தினரிடையே நடக்கும் எண்ண மற்றும் வார்த்தைப் பரிமாற்றங்களை நோக்கிப் பார்த்தால் போதுமானது. கலவரத்தில் ஈடுபடுவோர், தாங்கள் சார்ந்திருக்கும் குழுவினருடன் மிக விரைவில் தங்களை ஒப்புமைப்படுத்திக் கொண்டு கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். இதில் கலவரத்தை அடக்க முயலும் காவல்துறையினர் எதிரணியில் நிறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குள் தங்களுடைய அடையாளங்களைப் பற்றிய சமூகக் குறிப்பீடுகள், தாங்கள் குழுக்களாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்னும் வரலாற்றுப் பின்புலம் உடைய சமூகக் குறிப்பீடுகள், தங்களுடைய வீழ்ச்சிக்கு அல்லது இழிநிலைக்குக் காரணமாக அமைந்த எதிரிகள் பற்றிய சமூகக் குறிப்பீடுகள் போன்றவை அவர்களுக்குள் மிக எளிதில் பரிமாறப்பட்டு, ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். ‘நாங்கள்-அவர்கள்’ என்னும் குறிப்பீடு களத்திற்கு வந்து ‘அவர்களை’ எதிரிகள் என்னும் வட்டத்திற்குள் நிறுத்துகிறார்கள்.

சமூகக் குறிப்பீடுகள் மனித குழுக்களோடு பிணைந்தவைகளாக ஒருமுகப்பட்ட முறையில் உருவாக்கப்படுகின்றன; மாற்றி அமைக்கப்படுகின்றன; சில நீக்கப்படுகின்றன. இதை தொடர்பாடலில் வாழும் குறிப்பீடுகள் (Representations in interaction) என சமூக உளவியலாளர்கள் அழைக்கிறார்கள். தொடர்பாடல் எனும்போது அவை செயல்கள் சார்ந்தவையாக, நெகிழ்ச்சி மிக்கவையாக, சமூக மற்றும் தனிமனிதரின் நீட்சிகளாக சமூகத்தில் காணக்கிடக்கின்றன. சமூகக் குறிப்பீடுகள் என்பவை, நாம் மனதில் கருக்கொள்ளும் சொல்லாடலாக இல்லாமல், செயல்களாக நிலைகொள்கின்றன. மொழியைப் பற்றி விட்கின்ட்ஸ்டைன் (Wittgenstein) அவர்கள் கூறும் போது, மொழி என்பது செயல்பாடுகளினூடாக இழைந்தோடிக் கிடக்கும் எழுத்துக்களின் கோர்வையாக இருக்கிறது என்று கூறுகிறார். அதாவது சமூகத்தின் அன்றாட செயல்பாடுகளின் கருத்துப்பரிமாற்ற குறியீடுகளாக மொழி பொது வெளியில் காணக்கிடக்கிறது. மனிதர்கள் செயல்பாடுகளில் பங்கேற்று, அதைச் சார்ந்த குறியீடுகளை உருவாக்குவதால், அம்மொழி சுமந்து வரும் செய்தி நம்பிக்கைக்குரிய உண்மையாக மாறுகிறது.

செயல்களில் வாழும் சமூகக் குறிப்பீடுகள்

செயல்களால் நடைமுறையில் இருப்பதோடு, மாற்றங்களையும் புதிய வடிவங்களையும் பெறும் சமூகக் குறிப்பீடுகள் பற்றியத் தெளிவை, சமீப காலமாக இந்தியாவின் சில மாநிலங்கள் முன்னெடுக்கும் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் பற்றிய அலசலை மேற்கொண்டு அதில் அடங்கியிருக்கும் அரசியலையும் உண்மையான நிலவரத்தையும் பற்றியத் தெளிவின் வழியாக அறிந்திட இயலும். 


photo: pixabay.com

2019 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, டெல்லியில் செங்கோட்டையில் வைத்து நடத்திய உரையில் தற்போதைய பிரதமர் அவர்கள், மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது கட்டாயமாகிப் போய் விட்டது என்றும் அதைக் குறித்த விவாதங்களும், விழிப்புணர்வுகளும் உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். நம்முடைய பிள்ளைகளின் நலமிக்க எதிர்காலத்தை உறுதி செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் கூறினார். இதை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லும் பணிகளை அசாம் ஏற்கனவே தொடங்கியிருந்தது. தொடர்ந்து தற்போது, உத்திரப் பிரதேச மாநிலத்தால் ‘மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் 2021’ என்னும் முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது. இது அவசியமா என்பதைப் பற்றிய அலசல் மேற்கொள்ள 1950 ஆம் ஆண்டு தொடங்கி நமக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் வைத்து மேற்கொள்ளலாம். இது மொத்தக் கருவள வீதம் (Total Fertility Rate - TFR) என்னும் அளவையால் கணக்கிடப்படுகிறது. அதாவது, பெண்கள் கருத்தரிக்கும் வயதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையின் விகிதம் எனக் கணக்கிடப்படுகிறது.

இதன் படி இந்தியாவில் 1950 முதல் 1956 வரை மொத்தக் கருவள வீதம் 5.9 என இருந்தது. அது 1957 ஆம் ஆண்டில் 0.1 சரிந்தது. இதன் தொடர்ச்சியாக 1965 ஆம் ஆண்டின் இறுதியில் இது 5.7 ஆக இருந்தது. இப்படியாக குறையத் தொடங்கிய மொத்தக் கருவள வீதம் 1992 ஆம் ஆண்டு 3.9 ஐ எட்டியது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் 2.9 எனக் குறைந்து 2021 இல் 2.179 என்னும் வீதத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கும் நாட்டிற்கும் 2.1 ‘மாற்று நிலை கருவுறுதல்’ (Replacement Level) போதுமானது. இது மக்கள் தொகையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டி ஒரு பெண் பெற்றெடுக்க வேண்டிய சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அந்நிலை அடைந்து விட்டது என்பதில் ஐயமில்லை. அதே வேளையில், மொத்தக் கருவள வீதம் இரண்டிற்கு கீழ் வந்தால் மக்கள் தொகை சுருங்குகிறது, அத்தோடு சில ஆபத்துக்களையும் வருவிக்கிறது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரமிபிக்கும்; உழைப்போர் எண்ணிக்கைக் குறையும்; விகிதத்தில் அதிகமாக இருக்கும் முதியவர்களுக்கான கவனிப்புகளை விகிதத்தில் குறைந்து இருப்பவர்களால் முன்னெடுக்க வேண்டியிருக்கும். இத்தகையச் சூழல்கள் ஜப்பானில் இருக்கிறது. சீனா இந்த ஆபத்தை உணர்ந்து தனது கொள்கைகளை மாற்றியுள்ளது.

இந்திய அளவில், மக்கள் தொகை என்பது எவ்விதமான ஆபத்து வீதங்களையும் அடையாதச் சூழலில் அசாம் மாநிலம் 2017, செப்டம்பர் மாததில், மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் மற்றும் பெண்களை ஆற்றல்படுத்துதல் கொள்கையானது (Population and Women Empowerment Policy, கொண்டுவந்ததது. 2001 ஆம் ஆண்டில், அசாமில் மொத்தக் கருவள வீதம் 2001 இல் 3.2 இருந்தது. அது 2011 ஆம் ஆண்டு 2.2 ஐ நோக்கி குறைந்தது. ஆகையால் 2017 ஆம் ஆண்டில் இத்தகைய கொள்கையை முன்வைத்தல் அவசியமற்றது என்பது அனைவருக்கும் புரியும். அப்போதைய அசாம் மாநிலத்தின் நிதி அமைச்சரும், தற்போதைய முதலமைச்சருமானவர், இக்கொள்கை கொண்டு வந்த போது, அசாமின் பூர்வ குடியினரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றால் இக்கொள்கை கொண்டுவரப் பட வேண்டியது அவசியம் என்றும், இல்லையென்றால், மக்களின் வாழ்விடங்கள் சிறுபான்மையினர் கவைசம் மாறிவிடும் என்று கூறினார். முதலமைச்சராக மாறிய பின்னர் 2021 ஜூலை மாதத்தில், இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஜூலை மாதம் 28 ஆம் தேதி அளித்த நேர்முகத்தின் போது, சமமற்ற மக்கள் தொகை பெருக்கத்தால், அசாமியர்கள் தங்கள் சொந்த வீடுகளைக் கூட மற்றவர்களுக்கு பறி கொடுக்கும் நிலை ஏற்படும் என்றார். சிறுபான்மையினரின் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை ஆகியவைப் பெருகும் என்றார். சிறுபான்மையினர் என்று இங்குக் குறிப்பிடப்படும் இஸ்லாமியர்கள் பற்றியப் புள்ளி விபரங்கள் இத்தகைய ஆபத்தை வெளிப்படுத்தவில்லை. 

2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு தகவல் (National Family Health Survey Data - NFHS - 5) இன் கணக்கின் படி, இஸ்லாமியர்களின் மொத்தக் கருவள வீதம் 2.4 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்துக்களிடையே 1.6 எனவும் கிறிஸ்தவர்களிடையே 1.5 எனவும் காட்டுகிறது. ஆனால் 2005-2006 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பு தகவல் இஸ்லாமியர்களின் வீதம் 3.7 எனத் தரவு காட்டுகிறது. ஆக ஐந்தாண்டுகளில் 1.3 புள்ளிகள் குறைந்திருக்கிறது. ‘மாற்று நிலை கருவுறுதல்’ கொள்கையின் படி 0.3 மட்டுமே அதிகமாக இருக்கிறது. இந்த வீதம் அடுத்து வரும் ஆண்டுகளில் குறையும் என்பது பொது அறிவுடைய அனைவருக்கும் நன்கு புரியும். ஆனால், அரசின் சிறுபான்மையினரை ஆபத்தாக கட்டமைத்து பரப்புரை செய்ததன் பயனாக, அதே அரசியல் கட்சி ஆட்சியை கைப்பற்றியதோடு அதற்காக திட்டம் வகுத்த அன்றைய நிதியமைச்சர் இன்று முதலமைச்சரானார். இது பிரிவினையின் மக்கள் தொகை அரசியல் என்பதே உண்மை.

அடுத்த சட்டசபைத் தேர்தல் வர ஆறு மாதங்களே உள்ள நிலையில், உத்திரப்பிரதேசம் இதன் சோதனைக் களமாக மாறியிருக்கிறது. ஜூலை 9 ஆம் தேதி, அரசின் சட்ட இணைய முகப்பில் (portal) இதற்கான ‘மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் 2021’ முன்வரைவு பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான பதில் வினைகள் கோரப்பட்டன. இதன்படி இரண்டு குழந்தைகள் என்னும் நிபந்தனை வைக்கப்பட்டது. சட்ட முன்வரைவில் நோக்கம் முன்வைக்கப்படாத நிலையில், உலக மக்கள் தொகை நாளான ஜூலை 11 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர், பல்வேறு சமூகங்களுக்கிடைய நிலவும் மக்கள் தொகை சமமற்ற நிலையை சரிசெய்வதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார். இச்சட்டத்தில் ஊக்குவிப்புகளும், ஊக்கக்கேடுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டத்தின்படி இரண்டு குழந்தைகளை உடைய அரசு அலுவலர்களுக்கு இரண்டு ஊதிய உயர்வுகளும் (Increment), குழந்தைப் பெறும் காலத்தில் 12 மாதங்கள் முழுச் சம்பளத்துடன் ஓய்வும், 3 விழுக்காடு, ஓய்வூதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு குழந்தைப் பெற்றப்பின், கருத்தடைப்பு செய்தால் அக்குழந்தை ஆண் என்றால் 80000 ரூபாயும், பெண் என்றால் 1 லட்சமும் அளிக்கப்படும். அத்தோடு வீடு அமைப்பதற்கான ஊக்கத்தொகைகளும் அளிக்கப்படும். ஊக்கக்கேடுகளாக, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுப்பவர்கள் அரசு வேலைக்கு தகுதி அற்றவர்களாகவும், பஞ்சாயத்து அமைப்புகளில் போட்டியிடும் தகுதியற்றவர்களாவும் மாறுவார்கள். பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அக்குடும்பத்திற்கு 4 பேருக்கான உணவுப் பொருட்கள் மட்டுமே அளிக்கப்படும்.

இச்சூழலில் இம்மாநிலத்திற்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு தகவலை பரிசோதித்தல் சிறந்தது. 2016 ஆம் ஆண்டின் கணக்குப்படி மொத்தக் கருவள வீதம் 3.1 என இருந்தது. உலக தகவல் வரைப்படத்தின் (World Data Atlas) இன் 2018 ஆம் கணக்கின்படி அது, 2.9 ஆக குறைந்துள்ளது. உத்திரப் பிரதேச அரசின் கணக்கின் படி இது தற்போது 2.7 ஆக குறைந்துள்ளது. மேற்குறிப்பிட்ட சட்டத்தின் படி 2026 ஆம் ஆண்டில் அரசு இவ் வீதத்தை 2.1 என்று கொண்டு வர திட்டமிடுகிறது. குறைந்து வரும் வீதத்தின் அடிப்படையில் நோக்கும் போது, அரசின் எவ்வித குறுக்கீடல்களும் இன்றி, மொத்தக் கருவள வீதம் 2026 ஆம் 2.1 ஐ அடையும் என்பதை பொது அறிவால் எளிதில் அறிந்திட இயலும். 2001 ஆம் ஆண்டில், 4.1 ஆக இருந்த இந்துக்களின் மொத்தக் கருவள வீதம் 2011 ஆம் ஆண்டில் 2.6 ஆக குறைந்தது. குறைப்பு விகிதல் 1.5 ஆக குறிப்பிடலாம். இது இஸ்லாமியர்களிடையே 1.9 குறைப்பு விகிதமாக அமைந்தது. அதாவது, 4.8 இலிருந்து 2.9 நோக்கி சரிந்தது. ஆக, இஸ்லாமியர் மற்றும் இந்துக்களிடையேயான விகிதமானது, சமன் நிலையில் தான் இருக்கிறது. ஏழைகள் மற்றும் கல்வியறிவில்லாதவர்களிடையே இரண்டு சமூகத்திலும் மொத்தக் கருவள வீதம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் 19 மாநிலங்களில் மொத்தக் கருவள வீதம் 2.1 உக்குள் இருக்கிறது.

இச்சூழலில், அடுத்தத் தேர்வை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு போன்ற சட்டங்களைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் மற்றுமொரு தகவலை நாம் அறிந்திடுதல் நல்லது. உச்ச நீதிமன்றத்தில் குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்னும் வீதத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதற்கு 2018 ஆம் ஆண்டு வாக்குமூலம் அளித்த ஒன்றிய அரசு, இந்தியாவில் மொத்தக் கருவள வீதம் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டதோடு, மக்கள் மீது திணிக்கப்படும் குழந்தைக் கட்டுப்பாடு குறித்த சட்டங்கள் தவறானது என்று குறிப்பட்டதோடு, அப்படிச் செய்தால் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டது. இப்படிக் குறிப்பிட்ட அடுத்த ஆண்டு, 2019 ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் பிரதமர், மக்கள் தொகை பெருக்கம் கவலை அளிப்பதாகக் கூறுவது அரசியல் அல்லாமல் வேறென்பது. உத்திரப்பிரதேசம் கொண்டு வந்த சட்டத்தை தங்கள் மாநிலத்திலும் கொண்டு வருவதற்கான ஆவன செய்ய வேண்டுமென கர்நாடகா அரசும் குஜராத் அரசும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. பிரதமரின் குறிப்பிட்ட நோக்கம் சார்ந்த கவலையும், அதற்கு ஒத்திசைவோடு செயல்படும் அரசுகளும் நோக்கம் கொள்வது, பிரிவினை அரசியலின் வழியாக, ஓட்டுகள் பெற்று அதிகாரம் தக்கவத்தல் என்பதன்றி வேறேதும் இல்லை. 

நாங்கள்/அவர்கள் என்னும் முரண்சார்ந்த தர்க்கவியலை முன்வைத்து, மக்கள் மத்தியில், அச்சங்களையும், ஐயப்பாடுகளையும், பாதுகாப்பின்யையும் உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் நிறைவேறுவதை கண்கூடாக மேற்குறிப்பிட்டத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. நாங்கள்/அவர்கள் சார்ந்த சமூகக் குறிப்பீடுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் அரசை நடத்தும் அரசியல் கட்சி வெற்றிக் காண்கிறது என்பதை தேர்தல்கள் எண்பிக்கின்றன. சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை விழுங்கி விடுவார்கள் என்னும் ஆதாரங்களற்ற அச்சத்தை மக்கள் மனதில் ஊட்டுவதில் அவர்கள் முன்னெடுக்கும் செயல்கள் உதவி புரிகின்றன. செயல்களால் முன்னெடுக்கப்படும் பிரிவினை அரசியல், சமூக் குறிப்பீடுகளில் மக்கள் மத்தியில் தழைத்து வளர்ந்து அவர்களுக்கு தேவையான ஆதாயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அறிவியல் பூர்வமான உண்மைகள், களம் சார்ந்த ஆதாரங்களும் செயல் வடிவம் பெறாமல் இருப்பதில் அவர்கள் கவனமாய் இருக்கிறார்கள். அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் வழியாக பெரும்பான்மையினர் தங்களுடைய வாழ்வின் நடத்தைக்கான நீட்சிகளை எளிதில் அடையாளம் கண்டு அத்தோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களது, நிலையை உறுதி செய்வதில் அரசின் செயல்கள் உறுதுணையாகின்றன. இங்கே மோஸ்கோவிச்சி முன்வைத்த சமூக குறிப்பீடுகள் சார்ந்த முக்கியமான கருதுகோள் அர்த்தம் பெறுகிறது: ‘தன்னிலையும் பொருளும் அவைகளுக்கான பொதுக்களத்தில் பலவகைப்பட்டவை அல்ல.’ இங்கே பெரும்பான்மையினர் மனங்களில் திணிக்கப்படும் அச்சங்களும், பொது வெளியில் அரசு செயல்படுத்தும் சட்டங்களும் ஒத்துப் போகின்றன. அவை இருவேறு உண்மைகாளாக நிலைகொள்ளவுமில்லை.

2026 ஆம் ஆண்டு இதே அரசு, தாங்கள் கொண்டு வந்த சட்டத்தால் எவ்வித மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும், சமூகங்களின் சமன்நிலை எப்படிப் பேணப்பட்டது என்பதையும் பற்றிக் கூறுவதோடு, பெரும்பான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன என்பதையும் அறிக்கையாக வெளியிடலாம். அது உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் சமூக குறிப்பீடுகளும் சமூகத்தில் நடைமுறைக்கு வந்து, அரசியலாக்கத்திற்கு வேறு சமூக் குறிப்பீடுகளை ஊடுபொருட்களாகக் கொடுக்கலாம். 

இறுதியாக

சமூகக் குறிப்பீடுகள் கொள்கை முன்வைக்கும் சமூக வாசிப்பு, சாதாரண மக்களின் மனநிலையை அதன்படி பிரதிபலிப்பதில் வெற்றிக் காண்கிறது. தனி மனிதன், சில உளவியல் பார்வைகள் முன்வைப்பதைப் போன்று திட்டமிட்ட காரணம்/விளைவு என்னும் வட்டத்திற்குள் மனிதரின் நடத்தைகளை ஒதுக்குதல் சாத்தியமாகாது. அவை ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் செயல்படுத்தி சில பண்பாட்டு சார்ந்த நெறிகளை அவர்களுக்குள் புகுத்துவதற்கும் புகட்டுவதற்கும் உதவி புரியலாம். ஆனால், சமூகம் என்னும் பொதுவெளி அத்தகைய தர்க்கவியலின் அடிப்படையில் இயங்குவதில்லை. தனிமனிதர்கள் வாழ்வியல் நடத்தைகளின் நீட்சிகள் சமூகத்தில் பரவிக் கிடக்கின்றன. அத்தைகைய நீட்சிகள் இல்லையென்றால், தனிமனித வாழ்வும் சாத்தியமாகாதச் சூழலானது மனித வரலாற்றின் பகுதியாக இருக்கிறது. இத்தைகயதொரு இயங்குநிலையானது, மக்களைத் துண்டாடுவதற்கும், அதன் வழியாக அரசியல் ஆதாயங்களைத் தேடிக் கொள்வதற்கும் துணைபோகின்றன என்பதை மக்கள் தொகை கட்டுப்பாட்டை முன்னெடுக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் அதே அரசியல் கட்சியைச் சார்ந்த மாநில அரசுகளின் செயல்பாடுகள் தெளிவுப்படுத்துகின்றன. பொது அறிவின் துணைகொண்டு அன்றாட வாழ்வை நடத்தும் மக்களுக்கு அறிவியல் சார்ந்த தரவுகள் வாழ்வுக்குத் துணைபோகாததால் அவை அவர்களுக்குள் தாக்கம் ஏற்படுத்துவதுமில்லை. பிரிவினைகள் கடந்த, பொதுநலக் கோட்பாடுகள் கூடிய விரைவில் கைகூடுமா என்பதற்கான குறியீடுகள் எதுவும் இப்போதைக்கு தென்படுவதாக இல்லை.

மேலும் வாசிக்க

1. Wolfgang Wagner, Representation in Action, The Cambridge Handbook of Social Representations (ed. Gordon Sammutt, Eleni Andreoult, George Gaskell and Jean Valsiner), Cambridge, 2015, 12-28.

2. A. Bandura, Self-efficacy: Toward a Unifying theory of Behavioral Change, Psychological Review, 84(2), 1977, 191-215.

3. I. Ajzen, The Theory of Planned Behavior, Organizational Behavior and Human Decision Processes, 50, 1991, 179-211.

4. Serge Moscovici, Psychoanalysis: Its Image and Its Public, Polity, Cambridge 2008.

5. Parakala Prabhakar: BJP’s Population Politics&India’s Population Policy, Midweek Matters, 21, https://www.youtube.com/watch?v=k9lhG6mutQw

கருத்துரையிடுக

0 கருத்துகள்