இயல்பாய் இயங்கும் பாதங்கள் | அ. சந்தோஷ்

நிலத்தோடு உரசி உறவாடல் புரியும் பாதங்கள், உரசலின் ஒலியையும், எழும்பும் தூசியின் துகள்களையும், உணர்ந்திடும் வெதுவெதுப்பதையும் வெகுவாக இரசித்துக் கொண்டிருந்தது. குழிகளில் தங்கி நிற்கும் தண்ணீரின் மேல் குதிக்கும் போது, சகதியுடன் தெறிக்கும் தண்ணீரை ரசிக்கும் சிறுவனின் மனநிலையை பாதங்கள் ஏற்று உருமாறிக்கொண்டிருந்தன. குழியின் ஆழம், அதில் தங்கியிருக்கும் தண்ணீரின் தன்மை போன்றவற்றை குறித்து கிஞ்சித்தும் அக்கறைக் கொள்ளாமல் சகதியில் குதிக்கும் பள்ளிக்கூட நினைவுகள் வந்துப் போயின. பள்ளிக்கூட தோழமையின் குதூகலம் பாதங்களைத் தொற்றிக் கொண்டதால், அச்சம் என்பதை அகன்றிருந்தது. சகதியிலும், புழுதியிலும் பாதங்கள ரசனைகளை கண்டு விரைவாய் முன்னோக்கி நகர்ந்தன. இடர்பாடுகளை இலகுவாய்க் கடந்துச் சென்றிட ரசனையானது உற்சாக மருந்தாய் மாறிற்று. நடந்து நடந்து சலித்துப் போன பாதைகளிலே பயணிப்பதால் ஏற்படும் அயர்ச்சி பாதங்களைத் தொற்றவில்லை. பலர் நடந்ததும் பலவேளை பயணித்ததுமான பாதைகளின் பரவிக் கிடக்கும் தொற்று நோய்கள் எதையும் இயல்பாய் கடந்து செல்லும் போக்கு, இப்போது பாதங்களுக்கு இல்லை. எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியிலும் விசித்திரங்கள் பரவிக் கிடந்தன. அவற்றின் தன்மைகளை ஆராய்வதில் மனம் மூழ்கிக் கிடந்ததால், மனதை அழுத்தும் பழமையின் நோய்க்கிருமிகள் மனதை ஆக்கிரமிக்க காலம் போதுமாய் இருக்கவில்லை. பாதங்கள் பதிக்கும் அந்தந்த இடங்களின் நுணுக்கங்களில் மூழ்கி, அந்தந்த நொடிகளில் வாழும் வரம் கைகூடிக் கொண்டிருந்தது. நொடிகளில் கலந்து கிடந்த குழப்பங்கள் உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகமூட்டியது. இப்பொழுதுகளில் வாழ்தல், தீடிரென கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனையும் உடலுக்கீடாய் மெய்ச்சிலிர்ப்பூட்டியது.  நொடிகளில் வாழ்தல் தரும் பேராற்றலின் துணையுடன் பாதங்கள் பயணித்தன. 

photo: pixabay.com

புதுப்பாதையில் பாதங்கள் இயங்கிக் கொண்டிருந்ததால் புலன்கள் ஐந்தும் ஓய்வின்றி முழுவீச்சுடன் வேலை செய்து கொண்டிருந்தன. கண்கள் புதுமைகளைக் கண்டு நுகர்ந்து அதன் வண்ணங்களை உடலுக்கு ஊட்டுகையில் அப்பானத்தை அருந்தி உடல் தெம்படைந்தது. எழும்பிய ஓசைகளின் ரீங்காரங்கள் அனைத்தும் செவிவழி உள்நுழைந்து புதுப்புது அனுபவங்களைத் தந்துக் கொண்டிருந்தது. அனைத்தும் இனிமையாய் இல்லை. புதுப்புது ஓசைகள் சுற்றும் எழும்பியதால், வசைமொழியையும் செவியானது கேட்டு அதன் உள்ளர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதற்காய் மூளைக்கு வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. வீசிய காற்று மெய்யைத் தழுவி வருடிய போது, அதன் சிலிர்ப்பு உடல் முழுதுக்கும் உயர்ப்பூட்டியது. காற்றிலே கலந்திட்ட ஈரமும், வருடலின் நெகிழ்வும் புது அனுபவமாய் புதுமையின் எண்ணங்களில் வீறுடன் சென்றிட உதவியது. புலன்கள் யாவும் தத்தம் கடமையாய் நேர்த்தியாய் செய்ததால் பயணம் சலித்துப் போகவில்லை. உறுப்புகள் அனைத்தும் சுற்றம் ஊட்டிய பதார்த்தங்களை உண்டு அதன் திளைப்பில் பாதங்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. 

பாதங்கள் பயணிக்கும் வேகமானது வாசல்களைத் தாண்டுவதில் அடங்கியிருந்த சிரமத்தைக் குறைத்துக் கொண்டு வந்தது. சிரமம் என்று தீர்மானமெடுத்து மனம் பின்வாங்குவதற்குள் பாதங்கள் பல அடிகள் முன்னெடுத்து வைத்து நகர்ந்திருந்தது. பாதங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதைத் தவிர வேறுவழியின்றி மனமும் பாதங்களுக்கு ஈடு கொடுத்து புதுமையை நோக்கிச் சென்றது. அச்சம் அறியா இளமையின் துடிப்பும், புதுமைகளை நாடும் அதன் போக்கும் அனுபவம் தரும் பாடங்களின் தடைகளைத் தாண்டிட தூண்டுலாய் வருகின்றன. 

நடந்துக் கொண்டே இருப்பது இப்போது மிகவும் பிடித்துப்போய் மனதின் செயல்பாடாய் மாறியிருந்தது. அதுவும் வாசல்களைக் கடந்துச் செல்கையில் பெரிய உத்வேகம் மனதை ஆட்கொள்கிறது. திறக்கப்படாத வாசல்களைத் திறந்து நடப்பதற்காக செலவிடப்படும் ஆற்றலானது மேன்மேலும் கால்களை திடப்படுத்துகிறது. எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு காலடியும் நெஞ்சுக்குள் உரம் ஏற்றிக் கொண்டு இருக்கிறது. நடப்பதால் ஆற்றல் பெருகிக் கொண்டிருக்கிறது. அது புத்துணர்ச்சியை நெஞ்சுக்குள் புகுத்திக் கொண்டு இருக்கிறது. 

யாரும் பயணிக்காத பாதைகளின் பயணிப்பதில் அலாதி சுகம் உண்டு என்பதை பாதங்கள் காட்டிய லாவகம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. திரும்பி வருவதற்கானத் தடயங்கள் இல்லாமல் பயணிக்கும் சுகத்திற்கு ஈடில்லை. பொறுப்பற்றச் செயல் என அனுபவசாலிகள் கூறும் வாதங்களை மூளை நினைவலைகளினூடாக உடலுக்குள் புகுத்தி பாதங்களின் வேகத்தை குறைக்கப் பார்த்தது. பழமையில் தொலைவதற்கான ஒரு எத்தனிப்பாக அதுத் தோன்றியால்,  உடல் ஒத்துழைப்புக் கொடுக்காமல் உடல் மேல் விழுந்து தெறித்த மழைத்துளிப்போல் உதறித் தள்ளியது. தடயங்கள் நடந்தப் பாதையில் நடப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தி பாதங்களுக்கு தளைபூட்டி சிறைப்பிடித்து விடும் என்பதை உணர்ந்தோ என்னவோ, புலன் ஊட்டிய இயற்கையின் இரகசியங்களை உள்வாங்கி உடலானது முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்தது. தடயங்கள் எதவும் விழுகிறதா என்னும் சிந்தை இல்லாமல் நகர்தல் ரசனை மிகுந்த வாழ்வின் மர்மமாய்ப் பட்டது. வாரி வழங்கும் வள்ளலாய் இயற்கை செயல்பட்டுக் கொண்டிருந்தது. கைம்மாறு கருதாமல் அது அன்னத்தை புலன்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்ததால் திரும்பி நின்று நன்றி சொல்வதற்காக இல்லாத காலத்தை ஒதுக்க வேண்டியிருக்கவில்லை. அது தன் கடமையைச்  செய்வதில் நிறைவு கண்டுப் பூரிப்படைந்துக் கிடந்தது. நன்றிகள் சொல்வோரை இருந்தது கண்டுக்கொள்ளாமல் இருந்தது. நன்றி ஏற்கையில் அது தன் கடமையிலிருந்து தவறுகிறது என்னும் உள்ளுணர்வு இயற்கையெங்கும் பரவிக்கிடந்தது. அது யதார்த்தமாய் இருந்தது. அது எனக்கென எதவும் செய்யவில்லை. நானாகச் செல்வதால் தன்னையே வெளிப்படுத்தும் இயற்கையின் அற்புதங்களை அனுபவிக்க முடிந்தது. கடமைகள் எனவோ உரிமைகள் எனவோ எதுவும் அதனிடம் ஒப்படைக்கவில்லை. அது அதுவாக இருந்தது. அது இழந்தது, பெற்றது. இயல்பாய் இருந்தது. பழமையின் சுமைகளும் அதற்கில்லை, எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளும் அதற்கில்லை. அது இப்பொழுதில் வாழ்ந்துக் கொண்டிருந்தது. அதன் மீது விழுந்தவற்றையும், அதனை விட்டு நீங்கியவற்றையும், அதனிடமிருந்து பறிக்கப்பட்டதையும் அது இயல்பாய்க் கருதி செயலாற்றிக் கொண்டிருந்தது. பறிக்கப்பட்டதைப் பற்றியும் கவலைப்படவில்லை, கிடைக்காமல் போனவற்றையும் பற்றியும் நொந்து கொள்ளவில்லை. அதற்கு எல்லாம் வரங்களாய் இருந்தது. வரங்கள் தரப்படுவதால், ஏற்பும் இல்லை வெறுப்பும் இல்லை, புறந்தள்ளலும் இல்லை, அங்கலாய்ப்பும் இல்லை, முணுமுணுப்பும் இல்லை. 

இயற்கையின் இயல்பில் புலன்கள் கரைந்ததால், செயற்கைகள் எதுவும் புகாமல் இருந்தது. இயற்கை தாய் போல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தாள். அவள் மடியில் உடலும் உள்ளமும் நகர்ந்ததால் இயல்புகள் என்பது கைகூடிக் கொண்டிருந்தது.  சுயம் நகர்தை உறுதிச் செய்து கொண்டிருந்தது பாதங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்