அதிகாரம் இருக்கைப் போட்டு அமர்ந்திருந்தது. அதிகாரத்திற்கு வலுவூட்டும் விதமாக, நான்கு கால்கள், இருப்பதற்கான பகுதி, சாய்வு, கைகள் வைத்திட தாங்கு, போன்ற அவசியமான உள்ளீடுகளைக் கடந்து அவ்விருக்கைக்கு வேறு பலவற்றைப் பொருத்தி இருந்தார்கள். அவை ஒவ்வொன்றும் கம்பீரம், வீரம் என்னும் பழஞ்சொல்லாடல்கள் முன்வைக்கும் விவரங்களை வெளிப்படுத்தும் குறியீடுகளாக இருந்தன.
மர நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள், நெகிழி நாற்காலிகள், சொகுசு நாற்காலிகள் போன்றவற்றை விட இதன் உயரம் அதிகமாக இருந்தது. சாதாரணமாக அமரும் போது, கால்கள் தரையில் படும் விதமாக இருக்கைகளை அமைத்திருப்பார்கள் என்றால், இதன் கால்கள் இருப்பவரின் கால்கள் தொங்கும் விதமாக சற்று உயரமாக அமைக்கப்பட்டிருந்தன. கைதாங்கும் கைப்பிடிகளின் நுனிகள், சிங்கங்களின் உருவங்களைக் கொண்டிருந்தன. கைகள் வைக்கும் போது, உறுத்தும் விதமாக அதன் அமைப்பு அமைந்திருந்தாலும், சிங்கங்களின் முகங்கள் இரண்டும் முன் இருப்பவரின் முன் கம்பீரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதனால் அதற்கு அப்படிப்பட்டதொரு அமைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனுடைய கால்கள் நான்கும் சிங்கத்தின் கால்களுக்கு ஒத்ததாக மிகவும் நுணுக்கமாகச் செய்திருந்தார்கள். சிங்கத்தின் விரல்களைப் போன்று நாற்காலியின் மரக்கால்கள் செதுக்கப்பட்டிருநதன. அச்சாய்வு நாற்காலியின் சாய்வில், புலித்தோலை ஒத்த துணியானது போர்த்தப்பட்டிருந்தது. சிங்கம் புலித்தோல் தரிக்குமா என்றுத் தெரியவில்லை. அதை அலங்கரித்தவர்களுக்கு சற்றே சிந்தனைக்கோர்வை குறைவு என்றே அத்துணி உணர்த்தியது. அதைவிட விசித்திரம் என்னவென்றால் இருக்கையில் அமர்ந்திருந்த அதிகாரம் யார் என்றால் ஆட்டுக்குட்டியை ஒத்தவர். அவர் வெண்ணிற மேலுடையும் வெண்ணிற கீழுடையும் அணிந்தவராய் சாந்த முகம் உடையவர்.
அவ்விருக்கையை தயாரிப்பதற்காக பெரும்பாடுப் பட்டனர், அதிகாரத்தைச் சுற்றி இருந்தவர்கள் ஆசனம் அமைப்பதைப் பற்றிய விவாதத்தை நீண்ட நாட்கள் நடத்தினர். இருக்கையில் செய்ய வேண்டிய வேலைப்பாடுகள் பற்றிய விலாவாரியான விவாதங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வேலைப்பாடும் அதிகாரத்தை நிலைநிறுத்தவதாகவும், அதிகாரத்தை சார்ந்திருந்த மூதாதையர்கள் கொண்டிருந்த அடையாளங்களைக் குறிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இருக்கைக் கொண்டிருக்க வேண்டிய நுணுக்கமான வேலைப்பாடுகள் அனைத்தும் வரைபடமாக்கப்பட்டது. அதிகாரம் முழுவதையும் அவ்விருக்கையானது குறைகளின்றியும் பிசகுகள் இன்றியும் கொண்டிருக்க வேண்டும் என்பதும் தீர்மானமாக இருந்தது. இந்தப் புது இருக்கைக்கான அவசியம் இப்போதுதான் ஏற்பட்டது என்பதே உண்மை. காரணம், இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்கள் ஆடைகளால் தங்கள் அதிகாரத்தை நிறுவிக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விதிவிதமான ஆடைகள், அதிலே பலவிதமான தொங்கல்கள், தோரணங்கள் என அவர்கள் தாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுப்பட்டவர்கள் என்பதைக் காட்டிக் கொண்டுத்தான் வந்தார்கள். இப்போது இருக்கும் ஆட்டுக்குட்டி அதிகாரத்திடம் சுற்றும் இருந்தவர்கள் ஆடையின் முக்கியத்துவம் குறித்துப் பலவாறாகப் பேசினார்கள். மூதாதையர்கள் அணிந்த ஆடைகளின் அணிவகுப்பை அவருக்குக் காட்டி, அதிலே ஆசைமூட்டி ஆடை அணிவிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவை ஏதும் பலனளிக்கவில்லை. அவர் ஆடை அணிவதில் மாற்றம் கொண்டு வரப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதுபோல தன்னுடைய ஆடை விஷயங்களில் அன்னியர்கள் நுழைய அனுமதிக்கமாட்டார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் தற்போது, இருக்கையில் அதிகாரத்தை வடிவமைத்து நிறுத்தி, ஆட்டுக்குட்டிக்கு அதிகாரமூட்ட முயற்சியில் அவர்கள் இறங்கினார்கள். இருக்கை அமைக்கும் முழுப்பொறுப்பும் சுற்றி நடந்தத் தொண்டர்களில் முதல்வராக இருந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டுக்குட்டியின் அதிகாரத்தை நிலைநிறுத்தி, அதை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதில் அவரைப் போல அவ்வளவு தீவிரமாக ஆசைப்பட்டவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை எனலாம். அதனாலேயே அப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த இருக்கை செய்வதற்காக தச்சன் அழைத்து வரப்பட்டப்போது, முதல் வரியாக, பொதுவான வாசகமாக, ‘இருக்கையானது கம்பீரமாக இருக்க வேண்டும், பார்ப்போர் அனைவரும் அஞ்சும் படியாக இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. பிறகு அதன் நுணுக்கங்கள் அனைத்தும் வரைப்படமாக்கப்பட்டது. இருக்கையை உருவாக்குவது தச்சன் என்றாலும், அதற்கான அனைத்து கருத்தருக்களையும் கொடுத்துக் கொண்டிருந்தவர் அம்முதல்வரே. அவர் அதற்காக தச்சனின் பட்டறையை நாளுக்கு மூன்றுமுறை சென்றுப் பார்த்தார். அதில் சேர்க்க வேண்டிய அனைத்து விளக்கமான நுணுக்ககங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தார். அவ்விருக்கை இருநாள் அதிகாரத்தின் வீட்டின் பார்வையாளர் அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் மேல், ‘மரியாதைக்குரிய இதை யாரும் தயவு செய்து தொடாதீர்’ என்று எச்சரிக்கை பட்டையும் வைக்கப்பட்டது. பார்த்தோர் அனைவரும் அதைப் பார்த்து இரசித்தனர். அதைப் பார்ப்பவர்கள் அனைவருக்குள்ளும் ஒருவித அச்சம் உருவாவதை அவர்களின் முகப்பாவனைக் காட்டுவதை முதல்வர் அவர்கள் பார்த்து, தன்னையே மெச்சிக் கொண்டார். அவர் கற்பனையில் பாவித்த உருவத்தை அவ்விருக்கைப் பெற்றிருப்பதை உணர்ந்து தம்மையே மெச்சிக் கொண்டார். அவர் அடிக்கடி பார்வையாளர்கள் அறைக்கு வந்து, அதனை ரசித்தார். தூரமாக நின்றவாறு அதன்மீது செய்யப்பட்டிருந்த வேலப்பாடுகளை இரசித்ததோடு தன்னுடைய அதிகார மதிநுட்பத்தை நினைத்து நினைத்து வியந்தார்.
பார்வைக்கு வைக்கப்பட்ட இரண்டாம் நாள், முற்பகல் பதினொன்று மணியளிவில், “யாருடா அது” என்னும் குரல் கட்டடம் முழுவதும் கேட்குப்படி கர்ஜனையாக ஒலித்தது. அவ்விருக்கையில் அமர்ந்துப் பாக்க முயற்சித்தவன் பேயறைந்தவன் போல மாறிப்போனான். அவன் விளையாட்டாகத் தான் இருந்துப் பார்த்தான். இத்தகைய அவமரியாதையின் பெருங்குரல் ஒலித்து அனைவரையும் நடுங்கச் செய்யும் என்று அவன் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை. “அவ்விருக்கையானது மரியாதைக்குரிய இருக்கை. அதை யாரும் விளையாட்டாக நினைக்கக் கூடாது” என்று கடிந்து இடித்துப் பேசினார். இச்செய்தி அப்பிரதேசம் எங்கும் அதிகாரியின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களிடம் காட்டுத்தீப் போலப் பரவியது. இதை அறிந்த சில விஷமிகள், முதல்வர் அங்கு இல்லை என்பதை உறுதி செய்தவர்களாய் பிற்பகலில் வந்தார்கள். அதில் இனியனும் இருந்தான். வந்தவர்கள் முதுகை இடுப்பளவு வரை வளைத்து, தலை குனிந்து இருகரம் கூப்பி, “மதிப்புக்குரிய இருக்கையே வணக்கம்” என்று கூறிவிட்டு அவ்விருக்கையை பார்த்து விதவிதமாக சிலாகித்தனர். ஆனால் அவர்கள் காட்டிய விஷமத்தனமான மரியாதையானது முதல்வரின் காதுகளுக்கு எட்டியது. அவர் தனது பதிவேட்டில் அவர்களுக்கென, எதிர்மறை மதிப்பெண்களைப் போட்டு வைத்துக் கொண்டார்.
காலையில் இனியன் அதிகாரத்தை தொலைபேசி வழியாகத் தொடர்புக் கொண்டு பேசினான். இனியனின் குரல் தழுதழுத்தது. பேரிழப்பின் வரம்பில் அவன் நின்று கொண்டிருந்ததை உணர்ந்த அதிகாரம், இனியனுக்கு உதவிட விரும்பியது. அன்றைய தினம் அடிக்கடி அதிகாரத்தை அழைக்கலானான். அதிகாரம் மிகவும் கனிவுடனும் உதவும் இயல்புடனும் பேசிக்கொண்டிருந்தது. அதிகாரத்தின் பேச்சுக்கள் அவனுக்குள் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. முந்தைய நாள் இனியன் தூங்கவில்லை. ஆனால் தீர்மானமாக எதையும் செய்யும் நிலையில் அதிகாரம் இல்லை என்பது பேசும் மொழி நடையும் தொனியும் உணர்த்தியது. “நான் தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முயற்சிச் செய்துக் கொண்டிருக்கிறேன். என்னால் இயன்ற அளவு உதவி நான் செய்கிறேன்” போன்ற வாக்குறுதிகள் வந்ததே ஒழிய, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யும் நிலையில் அவர் இல்லை என்பது இனியனின் மனதில் ஏற்பட்டவாறு இருந்தது. முதல்வர் தான் அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்பது அவரின் சொல்லிடையே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. முதல்வருக்கு வேண்டிய வழக்கறிஞர் ஒருவர் உண்டு என்றும் அவர், தற்போது அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றும், சாதாரணமாக முக்கியமான வழக்கு சம்மந்தமான தயாரிப்பில் ஈடுபடும் போது, அப்படி அவர் அலைபேசியை முடக்கிப் போட்டுவிடுவார் என்றும் அதிகாரம் கூறிக்கொண்டே இருந்தது.
இனியனுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் தீவிரம் மனதிற்குள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அவனுக்குத் தெரிந்த வேறு அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் அவன் ஆட்டுக்குட்டி அதிகாரத்தை மட்டும் நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான். அவர் இவனிடம் அதீத அக்கறைக் கொண்டதாக இருப்பதாகவே உணர்ந்ததால் அவர் அனைத்தையும் நேர்மறையாகவும் தனக்கு சாதகமாகவுமே செய்துக் கொண்டிருந்தான் என்பதை அவன் உறுதியாக நம்பினான்.
தனதுத் தங்கையின் பதினொன்று வயது நிரம்பிய மகள் காணாமல் ஆகி இத்தோடு 30 மணிநேரம் முடிவடைந்தது. மூர்ச்சடைந்து விழுந்த தங்கை இடையிடையே எழும்பு மகளின் பெயரைச் சொல்லி அழைப்பாள். மீண்டும் மயங்கி விழந்தாள். இனியனும் நண்பர்களும் தேடி அலையாத இடங்கள் இல்லை என்று சொல்லலாம். சுற்று வட்டாரங்கள் அனைத்திலும் தேடியாயிற்று. பலக் குழுக்களாக பிரிந்து தேடலாயினர். நான்கு நாற்சக்கர வண்டிகள், இருச்சக்கர வாகனங்கள் பத்துக்கும் மேல் என தேடல் தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஆனால் எங்கேயும் கிடைக்கிவில்லை. நிழற்படம் காட்டி விசாரித்தப் போது, பலரும் பலவாறாகப் பேசினர். இரவு அவன் முழுமையாகத் தூங்கவில்லை. இரயில் நிலையத்திற்குச் சென்றவன், பார்த்த இரயில் பெட்டிகளில் எல்லாம், தங்கையின் மகளின் பெயரையும் வயதையும் குறிப்பிட்ட படங்களை போட்டான். ரயில் பெட்டிகளிலும் ஒட்டினான். கூட இருந்தவர்கள் அசந்தப் போது கூட இவன் தேடித் திரியலானான். எங்கேத் தேடுவது, காவல்துறை அதிகாரிகள் சற்றே ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் அனைத்தும் வசதியாக இருந்திருக்கும் என்பது அவனது எண்ணம். அதிகாரம் அதற்கு உதவி செய்யும் என்று நம்பினான். அதிகாரம் முதல்வரை நம்பியது, முதல்வரோ, வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகப் பேசிக்கொண்டே இருந்தார். எந்தத் தீர்மானமும் வரவில்லை.
ஏதோ ஞானோதயம் தோன்றியது போல, அதிகாரம் முதல்வரை அழைக்கலாம் என்றும் அவரோடு இணைந்து நாம் ஒரு விவாதம் நடத்தலாம் என்றும் கூறினார். இனியனின் தோழர்கள், முதல்வரை நம்ப வேண்டாம், நாம் வேறு ஆட்களைப் பார்ப்போம், இல்லையென்றால் நம்மால் இயன்றவரை தேடிப்பார்ப்போம் என்று கூறிப்பார்த்தனர். இல்லை, முதல்வராலும் அதிகாரத்தாலும் நம்மை கண்டிப்பாக உதவ முடியும் என்றுத் தீர்மானமாகச் சொன்னான். அதற்காக மேற்கொள்ள வேண்டியிருந்த பயணங்களை எல்லாம் மாலைக்குத் தள்ளிப் போட்டான். கைகால் புரியாமல் தவித்த அவனுக்கு ஏதாவது ஆசுவாசம் கிடைக்கும் என்று எண்ணினான்.
அதிகாரமானது புதிய இருக்கையில் அமர்ந்திருந்தது. அதிகாரம் முதல்வர் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி சரிந்திருந்தது. வலப்புறம் சரிந்திருந்தவராய், பலவாறாகப் பேசினார். பலத் திட்டங்கள் பேசப்பட்டன. இடதுபுறமாக இனியனும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். வலப்புறம் அமர்ந்திருந்த முதல்வர் கட்டிய கையை அவிழ்க்கவுமில்லை, வாய்த்திறந்து ஒரு வார்த்தைக் கூட உச்சரிக்கவுமில்லை. வழக்கமாக உள்ள மர்மம் நிறைந்த அதிகார மமதையின் நக்கலான சிரிப்பை மட்டும் முகத்தில் வெளிப்படுத்தியவாறு இருந்தார். எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தார் அவர் உறைந்தப் பனிக்கட்டிப் போல. இடதுப்பக்கமாய் அமர்ந்திருந்தவர்கள் எழுப்பிய ஆதங்கங்களின் குரல்களோ கண்ணீர் கதைகளோ முதல்வரை தொட்டுத் தீண்டியதாகக் கூடத் தோன்றவில்லை. மர்மம் நிறைந்த நகை மட்டும் தொடர்ச்சியாக முகத்தில் மேயவிட்டுக் கொண்டிருந்தார். அதிகாரம், மீண்டுமாக, வலதுபக்கமாக சாய்ந்து அமர்ந்து காலை காலின் மேல் போட்டு உட்கார்ந்து கொண்டது. காலின் பாதங்கள் இடதுப் பக்கமாகத் தெரியும் விதமாக இருப்பைச் சரி செய்து கொண்டார். முதல்வரின் மொழிகளை இவரே பேச ஆரம்பித்தார். முதல்வரிடம் நான் இந்த விஷயத்தைப் பற்றி இன்று பலமுறை பேசியாயிற்று. அவர் வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். அலைபேசியில் அவரைக் கிடைக்கவில்லை என்று காலையிலிருந்து சொல்லி வந்த, கிளிமொழியை திரும்பவும் சொன்னார். முதல்வர் உதவி செய்ய எப்போதும் தயார் என்றும் நீங்கள் உங்கள் முயற்சிகளை தொடருங்கள் என்றும் கூறி, கூட்டம் முடிவடைந்தது. அதிகாரம் உடனே முதல்வரின் அருகில் இருக்கையை நகர்த்திக் கொண்டு வேறுப் பேச்சுக்களில் ஈடுபடலாயிற்று. பெரிய பெரிய கெட்ட வார்த்தைகள் பேசி அதிகாரத்தையும் முதல்வரையும் அசிங்கமாகத் திட்ட வேண்டும் என்னும் வெறி கோபமாய் இனியனின் உள்ளுக்குள் குமுறுதியது. ஆனால் தனது தங்கை மகளே முக்கியம் என்று நினைத்து, தனது நிர்கதியை உணர்ந்து நண்பர்களுடன் தேடுதலைத் தொடர்ந்தான்.
ஆறுமாதங்களுக்குப் பிறகு, அதிகாரத்திற்கு இடுப்புப்பிடியும் அத்தோடு, முதுகெலும்பில் ஓருரு தகடுகள் விலகியும் உள்ளன என்றும் அதற்கான சிகிட்சையில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரிய வந்தது. மருத்தவர்கள், வலதுபுறம் அதிகம் சாய்ந்து நடந்ததாலும் இருந்ததாலும் இடுப்புக்கும் தகடுகளுக்கும் இக்கதி ஏற்பட்டது என்று கூறினர். ஓய்வில் இருக்கும் அவர் உட்கார்வதற்காக நிமிர்ந்து உட்கார வைக்கும் இருக்கை வாங்கப்பட்டது என்றும், நேராக மட்டுமே உட்கார முடியும் என்றும் செய்தி இனியனுக்கு எட்டியது. இனியன் தொலைந்ததன் தவிப்பிலிருந்து இதுவரையிலும் விடுபடவில்லை. அதிகாரத்திற்கு இடதுபுறமாய் அமர்ந்திருந்த நண்பர்களில் ஒருவன் எண்ணெய் பூசி நீவி விடச் செல்கிறான் என்றும் அறிந்தான்.
0 கருத்துகள்