தொலைதல்கள் அன்றாடம் அரங்கேறுகின்றன. அது அன்றாட நிகழ்வாகி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சிந்தனையில் தொலைகிறேன், சொற்களில் தொலைகிறேன், செயல்களில் தொலைகிறேன், பார்வைகளில் தொலைகிறேன், உரையாடல்களில் தொலைகிறேன், உறவாடல்களில் தொலைகிறேன், புறக்கணிப்புகளில் தொலைகிறேன், வசை மொழிகளில் தொலைகிறேன், எதிர்ப்பார்ப்புகளில் தொலைகிறேன், ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டத்தில் தொலைகிறேன் என சிறுசிறு காரியங்களுக்காக பெரிய மன அமைதியைத் தொலைக்கிறேன். நானே தொலைகிறேனா? இல்லை தொலைவதற்காக நான் என்னையே விட்டுக் கொடுக்கிறேனா? பிறர் என்னைத் தொலையச் செய்கிறார்கள் என்றே அற்ப புத்தி எனக்கு அறிவுரை ஊட்டிக் கொண்டிருக்கிறுது. கூர்மையாக நோக்கின் அது உண்மையல்ல. அது மட்டுமல்ல நேரிய மனதுடன் சுய ஆய்வுக்காக மனதை திறந்த வெளியில் வைத்தால், அது முற்றிலும் தவறானது என்பதை நான் அறிகின்றேன்.
பிறர் என்னைத் தொலைக்காமல் இருக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் இப்போது. ஆனால் அது கூட்டத்தினிடையே சாத்தியமாவதில்லை. பெரும் ஓசைகளுக்கு மத்தியில் சிறிதிளவும் அது கைகூடவுமில்லை. தொலைப்பதற்காக காதுகளும், கண்களும், நாசித் துவாரங்களும், மேனி உரசல்களும், நாச்சுவைகளும் துணை போகின்றன என்றே சொல்லலாம். என்னை நானாக இருக்க விடாமல் அவை செய்யும் அட்டூழியம் பெரிதாகவேப் படுகிறது. வெளிச்சல் பல வேளைகளில் கூச்சல் குழப்பங்களுக்கு வழிகோலுகிறது. இரவே உள்ளுக்குள் வெளிச்சம் பாய்ச்சி நானாக நான் இருப்தற்கு பெருந்துணை செய்கிறது. இரவு அனைத்தையும் அமைதியாக்குகிறது, என் மனதையும் கூட. மனிதர்கள் எல்லாம் என் உலகத்தை விட்டு போய் விடுகிறார்கள், அலைபேசி சிணுங்கல்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்தால் உள்வெளிச்சம் கிடைக்க மிகவும் எளிதாக இருக்கிறது.
இருளை இரசிப்பதற்கும், எனக்குள் இருக்கும் அசிங்கங்களை துடைப்பதற்கும் இருளே உதவிக்கரம் நீட்டுகிறது. சிறு வயது முதல், இரவில் வானத்தைப் பார்த்து இரசிப்பதில் அலாதி சுகம் கண்டிருக்கிறேன். அது பார்வைகளை நேராக்குகிறது. விண்மீன்களில் மட்டும் கண்களைப் பதியச் செய்கிறது. மற்று அலங்கோலங்கள் எதுவும் வழியில் இடையூறுகளாக வருவதில்லை. குறை பிறையும் நிறை நிலவும் அருமையாய்த் தோன்றுகிறது. சூரியனின் கொலைவெறித் தாக்குதல் இல்லாததால் பெரும் சுகம் உள்ளத்தை வந்து சேர்வதாக உணர்ந்திருக்கிறேன். அந்த ரசனையில், அன்றாட வாழ்வில் தொலைதல்களை அசைப் போடுவதற்கு மிகுந்த வசதியாய் இருக்கிறது. சிந்தையை குழப்பச் செய்யும் சூரியன் மேற்கில் சாயும் போது, புதிய வெளிச்சம் நெஞ்சில் ஊறுகிறது. நான் எனக்கென சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தவற்றையெல்லாம் கதிரவன் பறித்துக் கொண்டுப் போனான். உலகில் எல்லாரும் கூச்சலும் குழப்பமுமாக அலைந்துத் திரிந்தார்கள். எங்கும் ஓசைகளின் ஆரவாரங்கள். இரவின் வெளிச்சத்தில் நான் வீடுத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். பகலில் தொலைத்தவற்றையும், பலர் திருடிச் சென்றதையும் மீட்டு வந்துக் கொண்டிருக்கிறேன். அவற்றை மீண்டும் எனக்கெனப் பத்திரப்படுத்தும் பகீரத பிரயத்னத்தில் நான் இறங்கி இருக்கிறேன். அது போல, எனக்குள் தொற்றியத் தூசுகளையும் மாசுகளையும், இரவின் வெளிச்சத்தில் நான் களைந்துக் கொண்டிருக்கிறேன். இருள் பெரும் வெளிச்சமாய் அகக்கண்களுக்கு பார்வைக் கொடுப்பதால், மனதில் அப்பிய தூசுக்களை எல்லாம் துடைத்தெறிவது மிகவும் எளிதாயிற்று.
மாசு களைவதும், திருடியச் சென்றவற்றை மீட்டு வருதலும், தொலைத்தவற்றை கண்டெடுப்பதும் அன்றாட தேவையாக் தோன்றுகிறது. இரவு இப்போது மனதிற்கு தாலாட்டுப் பாடுகிறது. களிம்புப் போட்டுக் சிதைந்தவற்றை வருடி விடுகிறது, காயங்களில் மருந்துப் போட்டு கட்டி விடுகிறது, மன நிம்மதி கெடுக்கும் ஆசை என்னும் தீமையின் உருவத்தை நெட்டித் தள்ளி மனதைப் பத்திரப்படுத்துகிறது.
பார்வைகளை எனக்குள் செலுத்தி, சீர் செய்யும் அதிசயம் இரவின் பேரொளியில் நடந்தேறுகிறது. பகலில் புகுத்தப்பட்டப் பார்வைகளுள் சிலவற்றை விலக்கவும், அகத்திற்கு தெம்பூட்டுபவற்றை சொந்தமாக்கவும் தேவையாக இருக்கும் விவேகத்தை, இரவு எனக்குத் தந்துக் கொண்டிருக்கிறது. நான் நானாக மாறிக் கொண்டிருக்கிறேன், இரவின் வெளியில். இரவின் ஒளியில் நான் வீடுத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
வீடு திரும்புதல் அவ்வளவு சுலபமாக நடந்தேறுவதில்லை. வீடு திரும்ப முடியாத அளவுக்கு பயணித்தப் பாதைகள் என்னை வீட்டிலிருந்து பெரும் தூரத்திற்கு அகற்றி விடுகிறது. வீட்டுக்குத் திரும்ப முடியாது என்னும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. சில பாதைகள் மலைகளிலும் பள்ளத்தாக்குகளில் நடந்தேறுவதால், ஏறுவதும் இறங்குவதும் கடினமாகிப் போய், வீடு திரும்புதல் அசாதாரண சாகசமாகி விடுகிறது. சில வழிகள் திரும்ப வரும் போது காணாமல் போய் விடுகின்றன. புதிய பாதைகளைத் தேடுவதற்கு நான் நிர்பந்திக்கப்படுகிறேன். புதியப் பாதைகளை சீர்செய்து, வீடு திரும்புவதற்குள், வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். அனாயசமாக சில நாட்களில் வீடு திரும்புதல் நடந்து விடுவதால், அசதி நிறைந்த நாட்களின் இறுதியில் நினைவுகள் புதியத் தெம்பை உடலுக்குள் செலுத்தி விடுகிறது. அதன் வேகம் மறுநாளும் யாத்திரையைத் தொடங்க உறுதுணையாகிறது. சில நாட்களில் பெரும் பள்ளங்களில் கால் தடுமாறி விழுந்து விடுகிறேன். யாராவது தூக்கி விடமாட்டார்களா என்னும் எண்ணம் தான் நெஞ்சில் முதலில் வந்து விடுகிறது. அப்பா, அம்மா என இரத்தத்தோடு ஊறிப்போனவர்களின் கரங்கள் அவ்வேளைகளில் துணை வேண்டும் போல் இருக்கும். பாதங்களுக்குத் திடன் தந்து, நெஞ்சில் உரம் விதைத்தவர்கள், சுயமாக எழும்பி நடக்கும் பாடத்தையும் சேர்த்தேக் கற்றுத் தந்ததால், பள்ளங்களிலிருந்து எழுகிறேன். சில வேளைகளில் சிலரின் வார்த்தைகளும் சிலரின் அக்கறைகளும் துணைக்கு வந்து என்னை கரையேற்றச் செய்கின்றன என்பதே உண்மை.
எல்லா நாட்களிலும் வீடு திரும்புதல் நடப்பதில்லை. வெகு சில நாட்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்திருக்கிறேன். இரவு முழுவதும் பகலின் வெளிச்சமும் புழுக்கமும் நீண்டு பரவி விடுகின்றன. பகலின் கொடும் வெப்பமும், பல்லிளிக்கும் வெளிச்சமும் இருளின் வெளிச்சத்தை இருட்டாக்கி விடுகின்றன. சூரியன் எவ்வளவு இருளையும், பகையையும் சுமந்துத் திரிகிறான் என்பது அப்போது தான் புரிய வருகிறது. பகிலின் இருள் இரவின் வெளிச்சத்தை விழுங்கி விடுவதால், வீடுத் திரும்புதல் அசாத்தியமாகி விடுகிறது. கூக்குரலும் குழப்பும் எங்கும் பரவி, பாதைகள் முழுவதையும் அசிங்கப்படுத்துவதோடு, இருளைப் பரப்பி விடுகிறது. பார்வையற்றவனுக்கு ஈடாக நான் நடக்க நேரிடுகிறது. கால்கள் இடறுகின்றன. தவறி விழுந்து விடுகிறேன், எழும்ப முடியா வண்ணம். கொடூரமானச் செயல்களும், செய்திகளும், சிந்தனைகளும் நெஞ்சை ஆக்கிரமித்து வெட்ட வெளியில் தள்ளி விடுகின்றன. பகலின் கோரத்தாண்டவம் நடந்தேறுகிறது. பகல் இரவுக்குள் அத்துமீறி நுழைந்து முழுவதையும் இருளாக்கி விடுகிறது. சில இழப்புகளும் வலிகளும் பகலின் கோரத்தாண்டவத்திற்கு துணைப் போகின்றன. அசாத்தியமான இரவின் வெளிச்சங்கள் அனைத்தும் இன்றும் நினைவிலிருந்து விலகா வலிகளாகவும் ஏக்கங்களாகவும் என்ன காவு கொள்ளத் துடிக்கின்றன. பகல் இரவை விழுங்கும் அக்கிரமம் தொடர்ந்து நீடித்து விடுகிறது. அது இரவை சுதந்திரமாக்கும் தருணம் மிகவும் நிதானமாகவே நடந்தேறுகிறுது. இரவின் வெளிச்சம் முழுமையாய் கிடைக்க பல வேளைகளில் பல நாட்கள் ஆகின்றன, சில பல மாதங்கள் கோருகின்றன. பகல் எவ்வளவு அரக்கத்தனம் கொண்டது என்பது இப்போதுத் தான் புரிகிறது. இரவை காவு கொள்ளும் பகல். இரவின் வெளிச்சத்தை அணைத்து விடும் பகலின் வெளிச்சம்.
அன்றாடம் வீடு திரும்புதல் கைகூடியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என் அறையில், என் கட்டிலில், என் வெளிச்சத்தில், நான் நானாக இருந்து சுயம் சுத்தம் செய்து, தொலத்தவற்றை மறுபடியும் சொந்தமாக்கும் அதிசய உலகம்.
0 கருத்துகள்