'தன்னிலை' என்னும் கண்ணாம்மூச்சி விளையாட்டு | அ. சந்தோஷ்

நான் யார்? என்னும் கேள்வி என்னை குழப்பிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. இன்று நேற்றல்ல. நீண்ட காலமாக. இத்தைய கேள்வியானது எழுகையில் வந்து போகும் தன்னிலை பற்றிய வெறுமையின் உணர்வுகள் தாங்கவொண்ணா வலிகளின், இழப்புகளின், அவமானங்களின் தீவிரத்தில் பெரிய ஆறுதலாக  ஆரத்தழுவி கணநேரம் நீடித்து மறைவதுண்டு.

வேதனைகள் சிந்தையை ஆக்கிரமித்து, உடலையும் உள்ளத்தையும் புரட்டிப் போடுகையில், அதிலிருந்து கடக்க முடியாதவாறு மூச்சுத் திணறி புழு போலத் துடிக்கும் போது, இதயத்துடிப்பு அதிகரித்து கசக்கிப் பிழியும் வலிகள் உள்ளெழும் போது, கண நேரத்தில் நான் யார்? என்னும் கேள்வி எழும். அப்போது, அதற்கான விடை தெளிவாய்த் தெரிவதில்லை. வெறுமை ஆட்கொள்ளும் போது, நான் யார் என்ற தெளிவற்ற நிலை உருவாவதுண்டு. அவ்வேளையில் நீர்க்குமுழி போல் ஓர் உணர்வு மேலெழும். ஒறுவிதமான வெறுமை. நான் நானாக நிலைக்கும் வெறுமையின் உணர்வு. கணநேரம் நீடிக்கும் சூழல் அது. அதை நீட்டித்துக் கொள்ள மனம் ஆசைக் கொண்டாலும் அது ஏதோ நழுவிப் போய்விடுவதுண்டு. அதை வசப்படுத்தி, நிரந்தரமாக்க முயல்கையில் அது, அதன் மீது செலுத்தப்புடும் வன்மைத்தை எட்டி உதைத்து வெளியேறி விடுகிறது. 

இழிவானப் பேச்சுக்கள், கேவலமான சித்தரிப்புகள் போன்றவை சுற்றத்திலிருந்து உள் நுழைகையில், வேதனை பெரிதும் பாதிக்கையில், கேட்டதுண்டு: நான் யார்? என்னும் கேள்வி. அவ்வேளியில் அள்ளி வீசப்படும் அவதூறுகளை ஒட்டிப் பிடித்துக் கொள்வதற்கான சுவர் எனக்குள் இல்லாமல் நான் கணப்பொழுதேனும் நின்றிருக்கிறேன். நான் யார் என்ற தெளிவற்றச் சூழலில், இழிவானவற்றை அப்பிக் கொள்ள நான் என்ற ஒன்று இல்லை என்னும் உணர்வு மின்னல் போன்று தோன்றி மறைந்ததுண்டு. ஹுசேர்ல், ஹைடகர், லெவினாஸ் போன்றவர்களும் அவர்களுக்கு முந்தைய மெய்யியலாளர்களும் எனக்கு பரிச்சமாகும் முன்னரே இத்தகையதொரு சூன்யம் என்னை ஆட்கொண்டதுண்டு. அந்த சூன்யத்தில் நீடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்னும் ஆசையும் எழுவதுண்டு. ஆனால் ஆசை தோன்றும் அதே கணத்தில் நான் வெறுமை என்னும் எண்ணமும் மறைந்து போகிறது. இங்கேக் குறிப்பிடப்படும் வெறுமை என்பது, கடவுளின் முன்னிலையில் இதயத்தை வெறுமையாக்கும் செயல் அல்ல. எனக்குள் கெட்டியானது, நிலையானது நான் என்னும் உணர்வு நிலையை உறுதியாக்கும் எதுவும் இல்லாத சூழல் என்று புரிந்துக் கொள்தல் நல்லது. 

photo: pixabay.com

வேதனைகளின் தீவிரத்தில் இத்தையக் கேள்வி எழுவதும் பெரும் ஆறுதலாக கண நேரம் நின்றும் மறைவதும் உண்டு என்பதை நான் கூறியாயிற்று. வலிகள் இன்றி, நிதானத்தில் இருக்கும் போது இக்கேள்வியை எழுப்புகையில் சரியான புரிதல்கள் இல்லாமல் போகிறது. தன்னிலை என்பது நழுவிச்செல்லும் மீன் போலவே இருக்கிறது. தொட்டிக்குள் கிடந்தவாறு நழுவிச் செல்லும் ஒன்றாக. என்னுடைய அருகாமையில் இருந்தும் எனக்குப் பிடிபடாத ஒன்றாக இருக்கிறது. அது ஒருவிதக் கண்ணாம் மூச்சி விளையாட்டுப் போல் இருக்கிறது. ஒளிந்துக் கொள்கிறது, தோன்றுகிறது மீண்டும் மறைந்துக் கொள்கிறது.

தன்னிலைக்கு இறையியல் விடைகள் இருக்கலாம், உறவின் அடிப்படையில் இருக்கலாம், பெற்றுக் கொண்டக் கல்வியின் அடிப்படையில் இருக்கலாம், மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, பிறப்பு, பெற்றோர், இனம், மதம், சாதி, உடல், திறமைகள் இவற்றின் அடிப்படையில் விடைகள் இருக்கலாம். 

ஆனால் தன்னிலை என்னும் நிலையில் நான் யார்? என்னும் கேள்வி நான் தனித்திருக்கையில் கைகூடாமல் விலகிப் போகிறது. அது எட்டிப்பார்க்கிறது, பிறகு தூணுக்குப் பின்னால் மறைந்துக் கொள்கிறது. கைக்குழந்தைக் காட்டும் கண்ணாம்மூச்சி விளையாட்டுப் போல் தோன்றுகிறது. குழந்தை முகத்தை மட்டும் மறைத்துக் கொண்டு அருகில் இருந்தவாறு விளையாட்டுக் காட்டுகிறது. முகத்தை மறைத்துக் கொள்ளும் கண்ணாம்மூச்சி விளையாட்டாக அது இருக்கிறது. இல்லையென்றால் கண்களை மட்டும் மூடிக் கொண்டு கண்ணாம் மூச்சி விளையாட்டுப் போல் இருக்கிறது. வேறு சில வேளைகளில் பள்ளிக் கூட குழந்தைகள் கண் கட்டி விளையாடும் கண்ணாம்மூச்சி விளையாட்டு போல் இருக்கிறது. அது எனக்கு முன்னால் நின்றவாறு ஆட்டம் காட்டுகிறது. பல்வேறு ஓசைகளை எழுப்பி என்னைச் சீண்டி விட்டு விளையாட்டுக் காட்டுகிறது. வேறு வேளைகளில், ஒன்று முதல் நூறு வரை எண்ணி விட்டு ஒளிந்து போகும் விளையாட்டுப் போல் இருக்கிறது. தோன்றலும் மறைதலும் நிரந்தரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. தன்னிலைக்கான வாசல் திறக்கும் அதே வேளையில் அது அடைப்பட்டும் போகிறது. திறத்தலும் அடைதலும் எனக்குள் நிரந்தரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. யார் அடைக்கிறார்? யார் திறக்கிறார்? என்னும ்கேள்வி பலமாக எழுகிறது. நான் இன்பம் அனுபவிக்கச் செய்யும் பலவற்றால் நடந்தேறுகிறது என்பது லெவனாஸ் கூறுகிறது. அது வெளியே இருந்து வரும் மற்றவைகள், பிற மனிதர்கள் என்று அவர் விளக்கம் கூறுகிறார். (அவருடைய மெய்யியலும் கண்ணாம்மூச்சி விளையாட்டுத் தான். புரிகிறது போலும் புரியாதது போலும் இருக்கும். புரிந்து விட்டேன் என்று நெஞ்சு நிமிர்த்துக் கூறும் அடுத்தக் கணத்தால் பல பிடிபடாமல் போய்விடுகிறது). 

உணவை உண்ணும் போது எனக்குள் ஏற்படும் இன்ப நிலையில் தன்னிலை உருக்கொண்டு பின்னர் நழுவுகிறது. நான் மகிழ்வுற்று உணவை உண்ணும் போது, எனக்குள் ஏற்படும் களியின்பமானது எனக்குள் தன்னிலையைத் தருகிறது. என்னை வருடும் காற்று எனக்குள் இன்பத்தை உருவாக்குகிறது. உடலை சிலிர்க்க வைக்கும், குளிர் காற்றை அள்ளி இறைத்து விட்டுச் செல்லும், பூ வாசத்தை நாசிகளுக்கு விருந்தாக்கி நகரும், ஆரத்தழுவி வருடி விட்டு கடந்து விடும், ஓங்கி அடித்து கீழே தள்ளிவிட்டுச் செல்லும். இவையெல்லாம் காற்று எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள். நான், நானாக மாறும் பொழுதுகள். இத்தகைய களியின்ப நிலையானது எனக்குள் தன்னிலையை உருவாக்கி நான் நானாக இருக்கச் செய்கிறது. உணவால் எனக்குள் தன்னிலை உருவாவதில்லை. மாறாக உணவு உண்ணும் போது, நான் பிறவற்றிலிருந்து பிரிக்கப்படுகிறேன். அதை முழுமையாகச் சொந்தமாக்க முடியாமல், நான் இன்பத்தை மட்டும் அனுபவிக்கச் செய்யும் நிலை அஃது. பிறவற்றிலிருந்து என்னை பிரித்தெடுக்கும் இன்பநிலை. அதில் தோன்றுகிறது என்னும் உணர்வு நிலை.

அப்படியானால் எனக்குள் மற்றவைகள் எனது தோலுக்குள் புதைந்துக் கிடக்கிறது. பிற மனிதர்களுக்கான கடமையுணர்வுகள் எனக்குள் புதைந்துக் கிடக்கிறது. பசித்திருக்கும் நான் உணவை வாய் வரைக் கொண்டுச் செல்லுகையில், வாடி வதங்கிய குழந்தை ஒன்று கை நீட்டுகையில் அவ்வுணவை குழந்தையின் வாயில் ஊட்டி விடுகையில் தன்னிலை உருப்பெறுகிறது. இல்லை கல் நெஞ்சம் கொண்டவனாய் நான் தரமாட்டேன் மறுத்துரைக்கும் போது, நெஞ்சுக்குள் நெருடலுண்டாக்கும் தன்னிலை தோன்றி மறைகிறது.

லெவினாஸ் மீதான வாசிப்புத் தொடரும். தன்னிலைத் தேடலும் வளரும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்