எனக்குள் வேரூன்றி கோலோச்சும் ஆலமரம் | அ. சந்தோஷ்

என்னுடையக் கட்டுப்பாட்டுக்குள் என்னால் வரமுடியவில்லை. என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் முடியவில்லை. அன்றாட வாழ்வை நகர்த்திச் செல்வதற்கான எனது நல்லெண்ணங்களை முன்னெடுக்க முடியாமல் தவித்துப்போய் நிற்கிறேன். என் சொற்பேச்சைக் கேட்காமால் வேறு பல எண்ணங்கள் என்னை ஆட்டிப் படைக்கின்றன. எண்ணங்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஓர் எண்ணம் அதிலிருந்து ஆலமரத்திற்கு கிளைகளில் வேர் முளைத்தார்ப் போன்று அனேகம் வேர்கள். அவைகள் எல்லாம் தரைவரை நீண்டு சென்று, வேர்களை ஊன்றி தங்களுக்கென என்னை அறியாமல் என் சத்தை உறிஞ்சி தனித்தனியே தழைக்க ஆரம்பிக்கின்றன. வேரூன்றிய எண்ண ஓட்டங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கென தனித்தனி வாழ்வை அமைத்துக் கொண்டதால், என்னுடைய வாழ்வு பரிதவித்துக் கிடக்கிறது. ஓர் எண்ணம் ஒரு வேருடன் இருந்திருந்தால் அதை வேரோடுப் பிடுங்கி எடுத்து என் கால்களை உறுதிப் படுத்தியிருக்கலாம். அது சாத்தியமாகாமல் போகிறது.  தனித்தனி வேர்களுடன் மைய எண்ணம் தன்னுடைய சாமராஜ்யத்தை தனியாக அமைத்துக் கொண்டு ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. எனக்குள் இருந்துக் கொண்டு அது செய்யும் அராஜகத்தை என்னென்று சொல்ல! என் வீட்டை அபகரித்து என்னை ஆட்டிப்படைக்கும் போக்கு எவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது. என்னுடைய கனவுகளை அது தகர்த்தெறிகிறது. இயல்பு வாழ்க்கைக்கு நான் திரும்ப எத்தனிக்கும் ஒவ்வொரு வேளையும் அது, என்னுடைய அனைத்து வளங்களையும் உறிஞ்சிவிட்டு எனக்கு வெறும் சக்கையை மட்டும் தீனியாக வைத்திருக்கிறது. வேறொன்று உறிஞ்சிப் போட்ட சக்கைகள் எனக்குள் அருவருப்பை ஏற்படுத்துகிறது. அவற்றைத் தொடவே அருவருப்பாய் இருக்கிறது. திரும்பிப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை. எப்படியாவது கண்களை மூடிக் கொண்டு எனக்கான ஆற்றலைப் பெற வேண்டும் என்று அவற்றிலிருந்து சக்தியை உறிஞ்சத் தொடங்கினால், ஏதுமில்லாமல் அவை வெறுமையாய் சிந்தனையில் அரைபடுகிறது. உணர்வுகள் எல்லாம் பட்டிணி கிடக்கின்றன.

photo: pixabay.com

சிறியச் செடியாகத் தான் அதுத் தொடக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் வேறு பல கவலைகள் மனதை ஆட்கொள்ளத் தொடங்குகையில், அது ஊட்டம் பெற வளமில்லாமல் காய்ந்து உலர்ந்துப் போய்விடும் என்று நம்பினேன். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று நண்பனும் சொல்லிவிட்டான். ஆனால், செடியானது என்னுடைய அன்றாட வாழ்விற்கெனவும், கனவுகளுக்கெனவும் துயரப்பட்டு, பெரும் அல்லலுற்று சேர்த்து வைக்கும் வளங்களை எல்லாம் அது முதலாளாய் உறிஞ்ச ஆரம்பித்திருந்தது. வளங்களை மடைமாற்றம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் அறிவுறுத்தப்பட்டேன். அதற்காக என் கனவுகளை நான் கூர்மையாக்க முயன்றுக் கொண்டிருந்தேன். அது கைகூடாமல் போய்க் கொண்டே இருந்ததை என் உணர்வுகள் எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தாலும், அதை நம்பாமல் இருந்தேன். மெத்தனமா? இல்லை, அதில் கண்ட சுகமா? தெரியவில்லை. ஆனால், என் சோம்பலை வளமாக்கி, நான் மடைமாற்றம் செய்யும் இடங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது அவ்வெண்ணம். வளரத் தொடங்கிய சிறு காலத்திலேயே அது, என்னுடைய முழுக் கட்டுப்பாட்டை தன் வசத்திற்குக் கொண்டு வருவதில் பெரும் வெற்றி கண்டுவிட்டது என்றே சொல்லியாக வேண்டும். என்னைக் கொன்றுக் கொண்டு அது வளர்ந்துக் கொண்டிருக்கிறது. அது ஆலமரமாய் அல்ல மிகப்பெரிய ஆலமரமாய் விரிந்து வளர்ந்து தன் பேரரசை எனக்குள் நிறுவி ஆசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. என் கனவுகள் எல்லாம் தவித்துக் கிடக்கின்றன. என்னுடைய அன்றாட வாழ்விற்குத் தேவையான ஊட்டச் சத்திக் கிடைக்காமல் நான் எங்கோ வீழ்ந்துக் கிடக்கிறேன். அது மட்டும் அதன் சவுகரியங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கொல்வதற்காக நான் என் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் எனக்கே பேராபத்தில் போய் முடியும் என்பதால், மிகப்பெரிய போராட்டம் எனக்குள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வளங்கள் எதுவும் நான் சேகரிக்க மாட்டேன் என நான் அடம்பிடிக்க ஆரம்பித்தால், ஆலமரம் மட்டுமல்ல, என் சொந்த உலகமும் சுருங்க ஆரம்பிக்கிறது. ஆலமரம் மிச்சம் வைக்கும் எச்சமும் எனக்குக் கிடைக்காமல் போகும். ஆகையால், பெரும் முயற்சி எடுத்து நான் வளங்களை சேகரித்துக் கொண்டே இருக்கிறேன். 

என் சிந்தனையை மட்டுமா ஆக்கிரமித்திருக்கிறது? உணர்வுகளை எல்லாம்தான். என் கனவுகளின் உணர்வுகள் பெரும் பட்டினி கிடக்கிறது. நான் பெரும் முயற்சி எடுத்து என் உணர்வுகளுக்கு தீனி போட எத்தனிக்கிறேன். ஆனால், என் உணர்வுகளை எல்லாம் அதுவல்லவா ஆக்கிரமித்திருக்கிறது. என் செய்வேன் நான். 

என் வீட்டின் அயலானின் ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது
அவன் பெருந்தீனி உண்கிறான் என் உழைப்பில்
நான் ஒட்டிய வயிறுடன் ஓரமாய் நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்
அவன் போட்ட எலைகளில் ஒட்டியிருக்கும் மிச்சங்களால் வயிறு நிரப்ப காத்திருக்கிறேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்