அம்மாவின் வாயிலிருந்து சொற்களைப் பிடுங்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அவளுக்கு வாய்த்திருந்த லாவகம் எனக்கு வாய்க்க வேண்டும் என்று நினைக்காத நாளில்லை. அவள் உதிர்க்கும் பழமொழிகள், பாடும் பாடல் வரிகள், உக்கிரம் நிறைந்த சொற்கள், கேலி மொழிகள், உரிமைச் சொற்கள், நெறிப்படுத்தும் சொற்கள், வாழ்வை இலகுவாக்கும் சொற்கள், நெஞ்சுரத்தின் சொற்கள் என வகை வகை வகையாகப் பிரிக்கலாம். அச்சொற்கள் எனக்கு வாய்க்கவில்லை. ஆங்காங்கே சிதறியவற்றை நான் சேகரிக்க இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன். அரைகுறை மூளை ஆங்காங்கே சிலவற்றை மட்டும் பதிவு செய்து வைத்திருக்கிறது. அவற்றை கோர்வையாக்க நான் பெரும் பாடு படுகிறேன். கோர்வையிலெல்லாம் நிறைய அபத்தங்கள். கோர்த்துவைத்திருக்கும் பூமாலையிலிருந்து மலர்கள் எல்லாம் உதிரத் தொடங்குகின்றன. கோர்வையாக்கக் கூட தெரியாத முட்டாளாக பல வேளைகளில் மாறி விடுகிறேன். தர்க்கவியலின் நுணுக்கங்களில் அம்மாவின் சொற்களை அடுக்கி வைக்கப் பார்க்கிறேன். அவைகள் துருத்திக் கொண்டு நிற்கின்றன. அம்மா உதிர்த்த சொற்களில் வெளிப்பட்ட இனிமையும், நயமும், கலையும் என் எழுத்துக்களிலிருந்து விலகி விடுகின்றன. அவை தூரமாக எட்டி நின்று என்னை எள்ளி நகையாடுகின்றன. மூன்று வரைப் படித்த அவள் வாசிப்பதில்லை. எல்லாம் கேள்விகளே. அவளுக்கு மட்டும் எப்படி இத்தனைச் சொற்கள் கைகூடின என்பது விசித்திரமாகவும் புரியாத புதிராகவும் இருக்கிறது. அவ்வளவு சொல்வளம் மிக்க அவளிடமிருந்து இன்று சொற்களைப் பிடுங்கத் முயற்சிக்கிறார்கள். அவளது சொற்கள் இனி மேடையேற்றப்பட வேண்டுமானால், அவளில் வாயிலிருக்கும் சொற்களுள் பெரும்பாலனவற்றைப் பிடுங்கியாக வேண்டும். அவளை நவனீப்படுத்தி அரங்கின் நடுவில் நிறுத்துவதற்காக அதைச் செய்தாக வேண்டுமாம். இது அதிகாரிகள் விரித்த சதி வலை என்பதை அவள் அறிந்திருந்தாள்.
அவளது சொற்கள் நீதியை வெளிப்படுத்தும். கண்டதை கண்டப்படியே சொல்லித் தீர்க்கும். வெள்ளந்தி மனம் அவளுக்கு. அது பாவம் என்று முத்திரைக் குத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடவுளுக்கே அது அடுக்குமா? உள்ளதை உள்ளப்படியே உரைத்தல் அல்லவா நேர்மை, முதுகுக்குப் பின்னால் குத்துவதை விட, நெஞ்சுக்கு நேராக நின்று போரிடவல்லவா இலக்கியங்கள் கற்றுத் தந்திருக்கின்றன. அவளுடைய அப்பாவும் அதைத்தான் அவளுக்கு ஊட்டி வளர்த்திருந்தார். அதுவன்றோ பண்புமிக்க வாழ்வு, அதுவன்றோ நேரிய வாழ்வுக்கான இலக்கணம். புறம் பேசித்திரிதல், உண்மைகளைத் திரித்துக் கூறுதல், பிறர் குற்றம் புரிகையில் தவறு எனக் கூறும் துணிவு இல்லாமை ஆகியவை அனைத்தும் கடவுளுக்கு அடுக்காதவை என்பதைத்தான் அவள் கற்றுத் தேர்ந்திருக்கிறாள். அது சரியல்ல என்பதை கூற ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகையால் அவள் வாயில் குடிகொள்ளும் சொற்களை எல்லாம் பிடுங்க வேண்டும் என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது. தூபம் போடுதல், சிங்கி அடித்தல், ஜால்றா அடித்தல் போன்றவை எல்லாம், மோசமானச் செயல்கள் என அவள் கற்றிருந்தாள். உரிமைகள் பெற யார் முன்னும் கையேந்தக் கூடாது, உரிமை என்பது பிச்சை அல்ல என்பது அவளின் வாதம். அதுப் பிறப்புரிமை என அவள் பேசித்திரிந்தாள். இயற்கையாக இயல்பிலே நெய்துச் சேர்க்கப்பட்டவை என்பதை அவள் துணிவுடன் சொன்னாள். யார் முன்னும் சுய மாண்பை பணையம் வைக்கக்கூடாது என்பது அவள் கற்றிருந்த பாடம். அவள் சுய உழைப்பில் நம்பினாள். சொந்தப் பணத்தில் உயர வேண்டும் என்று கற்றிருந்தாள். யார் போடும் பிச்சையிலும் வாழ வேண்டும் என அவள் கூறவில்லை. அவை எல்லாம் நற்குணங்கள் அல்ல எனவும் அதைச் சார்ந்த சொற்கள் அனைத்தையும் அவளின் வாயிலிருந்துப் பிடுங்கி விட வேண்டும் என்பதை அதிகாரிகள் தீரமானித்தார்கள். அவள் வாயில் உரிமையின் சொற்கள் இருக்கக்கூடாது, தவறுகளைக் கண்டால் விமர்சிக்கும் சொற்கள் வசிக்கக் கூடாது, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சொற்கள் வசப்படக்கூடாது, மாறாக அவளது வாயில் மெழுகு பூசிய சொற்களை அடுக்கி விட வேண்டும். அநீதியைக் காணும் போது அமைதியாகக் கடந்து போகும் மெளனத்தை அவள் வாயில் வைத்துத் தைக்க வேண்டும். கோபம் வெளிப்படும் எச்சொற்களும் அவள் வாயில் இருக்கக் கூடாது.
உரிமைகளைப் பற்றிப் பேசினால் அது நாராசமாய் அதிகாரிகளின் காதுகளில் போய் பாய்கிறது. அவர்கள் அனைத்தையும் பெற்ற பூரணர்கள் என நம்பிக்கொண்டிருப்பவர்கள் அல்லவா? அவர்கள் எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லவா? அவர்களை கேள்விக் கேட்டால் அமைப்புகள் எல்லாம் தகர்ந்துப் போய் விடும். நாளை பலரும் மதிக்கமாட்டார்கள். பொய்களின் மீது கட்டியெழுப்பிய ஆசனங்களின் மேல் இருப்பவர்கள், அதனை துதி பாடும் கூட்டத்தினரின் சொற்களால் அலங்கரித்தனர். அதற்காக அவர்கள் பலரை விலைக்கு வாங்கினார்கள். பெரிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்கள். அறனற்ற வாழ்வைக் கொண்டவர்கள் சொற்களை வசமாக்கிக் கொண்டிருந்தவர்கள், எவ்விதக் கூசலுமின்றி சொற்களை அடுக்கிக் கொண்டேப் போனார்கள். அதிகாரிகளைப் பற்றி கற்பனைக் கதைகளைப் புனைந்தார்கள். அவற்றையெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார்கள். அச்சொற்கள் எழுப்பிய கூடாரத்தின் உள்ளே இருந்தவாறு குளிர் காய்ந்துக் கொண்டிருந்தார்கள் அதிகாரிகள். அக்கூடாரத்தைக் கிழித்தெறியத் துணிந்தாள் அம்மா. அவள் கிழித்தெறியவில்லை. அவளது சொற்கள் ஒவ்வொன்றும் அம்புகளாய் போய் விழுந்தன அக்கூடாரத்தின் மீது. கூடாரத்தின் கூரைகளில் கிழிசல்களும் ஓட்டைகளும் விழுந்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருக்கவா சொல்கிறீர்கள் அதிகாரிகளிடம்? அவர்கள் 'வழுவா வரம்' பெற்று வந்தவர்கள் என்று சுற்றியிருந்தவர்களை நம்ப வைக்க எவ்வளவோ அன்றாடம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் சொற்கள் ஏற்படுத்தியக் கிழிசல்களை இணைக்க அவர்கள் பலரை வேலைக்கு அமர்த்தினார்கள். அவர்கள் ஓட்டை அடைக்கும் செயலை நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள் எனபது உண்மையே. ஆனால், அம்மாவின் சொற்கள் ஏற்படுத்தும் தாக்கத்தால், கிழிசல்கள் பெரிதாகி விடுகின்றன. அவற்றைத் தைக்க முடியாத அளவு அவை பெரிதாகக் காணப்படுகின்றன. தைப்பதற்கானத் துண்டுத் துணிகளை வேறிடத்திலிருந்து வாங்க வேண்டியிருக்கிறது. அது ஒட்டுப் போட்ட இடங்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. இனி ஒரே ஒரு வழிதான் மிச்சமிருக்கிறது. அது அம்மாவின் வாயிலிருந்து சொற்களைப் பிடுங்கி விடுவது. இதுவரைக்கும் அவளுக்கு வாய்த்திருந்த சொற்கள் அனைத்தையும் பிடுங்கி விட வேண்டும். அவற்றைப் பிடுங்கி விட்டு வேறு மொழிகளை அவளுக்குள்புகுத்தியாக வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. அம்மா அவளுக்குச் சொந்தமான சூழலிலிருந்து விரட்ட ஆரம்பத்தனர். அவள் பயணித்த இடங்களுக்கு திரும்ப அனுப்பி அவ்விடங்களில் அவள் அவ்வார்த்தகளை தொலைக்க வேண்டும். அதற்காக அவளை விரட்டத் தொடங்கினார்கள். இதுவரைக்கும் கடந்து வந்த பாதைகளை நோக்கியும் இடங்களை நோக்கியும் அவள் விரட்டப்பட்டாள்.
அவள் பயணித்தப் பாதைகளையும் பொழுதுகள் கழித்த இடங்களையும், அவள் சொற்களை சொந்தமாக்கிய பெருங்கதைகளையும் விவரிக்க போனால், அதற்கு எம்மாத்திரம் சொற்களை நான் அடுக்கியாக வேண்டும். ஆயிரம் முடியாது, பத்தாயிரத்துக்குள்ளும் ஒதுங்காது. லட்சங்களும் பத்தாது. கோடிக்கணக்கில் வார்த்தைகளை அடுக்கியாக வேண்டும். அவள் சொற்களைச் சொந்தமாக்கிக் கொண்டதன் வரலாறை சொல்லவே கோடிக்கணக்கிலான சொற்கள் அடுக்க வேண்டும் என்றால், அச்சொற்கள் உருவானதின் பின்புலங்களையும் களங்களையும் ஆராய்ந்தால் எங்கேப் போய் முடியும் சொற்களின் அணிவகுப்பு!? அது தொடுவானம் போல சென்றுக் கொண்டே இருக்கும். அவள் கோபத்தின் சொற்களை, கொப்பளித்ததற்கான சூழல்களைப் பற்றி நான் விவரிக்கலாம். கேலிப்பேச்சுடன் வாழ்க்கையை அவள் சுவாரசியமாக்கி நிகழ்வுகளின் தொகுப்புகளின் குறிப்புகளை என்னால் தர முடியும். அவள் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து சொற்களை சொந்தமாக்கியதன் சூழல்களின் எச்சங்களை சில நூறு சொற்களில் தரலாம். ஆனால், அச்சொற்கள் அம்மா சொந்தமாக்குவதற்கு முன்னால் யார் யார் வழியாக வந்தது என்று அலசினால் சொற்களின் வெளி சமுத்திரம் போல் விரியும். அவை கடந்து வந்த வெளிகள், வலிகள், சுமைகள், பாடுகள், மகிழ்ச்சிகள், இகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், காதல்கள், தண்டனைகள், தீர்ப்புகள் என்பவற்றை எழுதிடவும் அலசிடவும், கதையாக எழுதுதலும் சாத்தியமா?உணர்ச்சிகளோடு தழுவியும் உரசியும் எழுந்தவை அல்லவா அவை? உணர்ச்சிகளைக் களைந்து வெற்றுச் சொற்களாக அடுக்கிப் பார்க்க நான் பல வேளைகளில் முயற்சிச் செய்துப் பார்க்கிறேன்.
அம்மாவை விரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். நீ சம்பாதித்தச் சொற்களை தொலைத்துவிட வேண்டும் என்னும் கட்டளையுடன். எவ்விடங்களிலிரு்து அவற்றை சேகரித்தாயோ அவ்விடங்களிலே விட்டுவர வேண்டும் என்று விரட்டிக் கொண்டிருக்கிரார்கள். அம்மாவின் உயிரோடும் உணர்வோடும் கலந்த சொற்களை பிரித்திட இயலுமா? மரண ஓலமெடுத்து அவள் ஓடிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் தொலைந்து போய் விடுவாள் என்பதை அவர்கள் அறிந்தவர்களாய் விரட்டுகிறார்கள். சொற்களை இழந்தப்பின்னர் அம்மாவின் இருப்பு சாத்தியமாவதில்லை. நினைவுகளை இழந்தவளுக்கு என்ன வாழ்க்கை? வாழ்விக்கும் சொற்களின்றி வாழ்வெங்கேக் கைகூடும். அவர்கள் திட்டமிட்டு அச்சதிச் செயலைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வதற்கென, அம்மாவின் வாழ்வை வேண்டுமென்றே தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காக அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கி இருக்கிறார்கள்.
திரும்பிச் செல்வதற்காக நிர்பந்திக்கப்பட்ட அம்மா முதல் அடியிலேயே தளைக்கப்பட்டாள். நினைவுகள் பெரும் சுமையாய் அழுத்த பாதங்கள் அசையவில்லை. அவர்களின் முயற்சி தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது.
தூண்டிய செய்தி
Political uproar over ‘unparliamentary’ word list, The Hindu (Delhi Edition, FRIDAY, JULY 15, 2022, P. 13.
0 கருத்துகள்